மேலும்

சீனாவிடம் ஆறு புத்தம் புதிய விமானங்களை வாங்கியது சிறிலங்கா விமானப்படை

சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஆறு புத்தம் புதிய PT-6 ரக பயிற்சி விமானங்கள் சிறிலங்கா விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடம் இருந்து இந்த அடிப்படைப் பயிற்சி விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதி கடந்த 15ஆம் நாள், சீனாவின் நான்சாங்கில் உள்ள ஹொங்டு விமான கைத்தொழில் மையத்தில் நடந்த நிகழ்வில் இந்த விமானங்களைப் பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இந்த விமானங்கள் சிறிலங்கா விமானப்படை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள நிறத்தைக் கொண்டதாக இருப்பதுடன், உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய வகையில், தயார் நிலையில் இருப்பதாகவும், சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா விமானப்படையின் 1ஆம் இலக்க  பயிற்சி அணியில் இந்த விமானங்கள், இடம்பெறவுள்ளதுடன், சீனக்குடாவில் உள்ள விமானப்படையின்  பயிற்சி பாடசாலையில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.

சுமார் 5 மில்லியன் டொலர் செலவில், ஆறு PT-6 பயிற்சி விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு 2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபை அனுமதி அளித்திருந்தது.

இந்த வகை விமானங்கள், சீன விமானப்படை,  மற்றும் அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது.

ஒற்றை இயந்திரம் கொண்ட இந்த பயிற்சி விமானம், ஆரம்ப கட்ட விமானிகள் பயிற்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *