மேலும்

படுகொலை நினைவேந்தல் : சிறிலங்கா அமைச்சர்- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம்

வடக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் செயற்பாடுகள் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் நடுநிலை வகிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக தொடர் கேள்விகளை எழுப்பினார்.

இதனால் ஊடகவியலாளர்கள் சிலருக்கும், அமைச்சருக்கும் இடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

ஊடகவியலாளர்- நாளை தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் தொடர்பாக வடக்கு மாகாண அரசியல்வாதி விடுத்துள்ள கோரிக்கை குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

அமைச்சர்- அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஜேவிபியினரும் கூட தமது வீரர்களை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தடவைகள் நினைவு கூருகிறார்கள்.

ஊடகவியலாளர் – ஆனால், இது படுகொலை என்று அழைக்கப்படுகிறதே? அத்துடன் தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

அமைச்சர் –  நல்லது.  அது ஒரு படுகொலை தான். அப்படி இல்லையா? அது ஒரு இனப் போர். வெளிநாட்டுப் படையெடுப்பு அல்லவே.

நீங்களும் இன்னும் சிலரும் இதனை ஒரு படையெடுப்பு போலவும், வெளிநாட்டவர்களை நாம் அகற்றியது போலவும் சித்திரிக்க விரும்புகிறீர்கள்.

இரண்டு பக்கத்தினதும் குழந்தைகள் தான் இறந்தார்கள். தமிழ் மக்கள் இறந்தது தான் உங்களின் பிரச்சினையா? 1988இல் சிங்கள மக்கள் கொல்லப்பட்டது உங்களுக்குப் பிரச்சினை இல்லையா?

ஊடகவியலாளர் – எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு.

அமைச்சர்- அதனால் என்ன?. ஜேவிபியும் கூட ஒரு தீவிரவாத அமைப்பாகவே முத்திரை குத்தப்பட்டிருந்தது. ஜேவிபியும் கூட தடை செய்யப்பட்டிருந்தது.

வடக்கில் கொல்லப்பட்டவர்களை நாங்கள் தீவிரவாதிகள் என்று கூறலாம். ஆனால், வடக்கில் வாழுகின்ற மக்களைப் பொறுத்தவரையில்,  அவர்களின் பெற்றோர், சகோதரர்கள், குழந்தைகள், மற்றும் உறவுகள்.

ஊடகவியலாளர் – போர் முடிவுக்கு வந்த போது, நாங்கள் போர் வீரர்களைக் கொண்டாடினோம். அதை கொண்டாட களியாட்ட விழாக்கள் நடத்தினோம். வடக்கில் உள்ள மக்கள் அதே காரியத்தை செய்யும் போது இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

அமைச்சர் – நாம் எமது வீரர்களை கொண்டாடிய போதிலும், நாம் உண்மையில் என்ன கொண்டாடுகிறோம்?  போர் வீரர்களை நினைவு கூரும் கொண்டாட்டமும் கூட, கொல்லப்பட்ட அனைவரதும் மரணத்தைக் கொண்டாடுவதாகவே இருந்தது. அதனால், நல்லிணக்கத்தைக் கொண்டு வர முடிவு செய்தோம்.

ஊடகவியலாளர் – ஆனால், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள்.

அமைச்சர் – தீவிரவாதிகள் மட்டுமா கொல்லப்பட்டனர்?

ஊடகவியலாளர் – அப்படியானால், ஏனைய மக்களும் படுகொலை செய்யப்பட்டனர் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

அமைச்சர் – தெளிவாக, போர்களில் தீவிரவாதிகள் மட்டுமல்ல, மக்களும் இறக்கின்றனர்.  ஒவ்வொருவருக்கும் இது தெரியும். 1971 கிளர்ச்சியின் போது, ஜேவிபியினர் மட்டுமா கொல்லப்பட்டனர்? இறப்புகள் இல்லாத போர் இல்லை.

ஊடகவியலாளர்- ஜேவிபியும், விடுதலைப் புலிகளும் இரண்டு வேறுபட்ட அமைப்புகள். புலிகள் ஒரு அனைத்துலக தீவிரவாத அமைப்பு.

அமைச்சர்-  விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும், ஜேவிபி தலைவர் ரோகண விஜேவீரவுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்று உங்களால் கூற முடியுமா? அவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பான வேறுபாடுகள் என்ன? யார் தவறு, யார் சரி என்று கூறுங்கள்.

ஊடகவியலாளர்-  சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக  போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், இராணுவம் பொதுமக்களை கொன்றதாக நீங்கள் கூறுகிறீர்களா? இராணுவப் பேச்சாளரால் இதனைக் கூற முடியுமா?

அமைச்சர்- போரின் போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று, இராணுவத்தில் உள்ள எவரும் கூறமாட்டார்கள். உலகில் உள்ள எந்த இராணுவமும் அவ்வாறு கூறாது. இது ஒரு போர்.

ஊடகவியலாளர்- இந்தக் கேள்வி இராணுவப் பேச்சாளருக்கு.

அமைச்சர்- பொதுமக்கள் இழப்புக்கள் இல்லாத போர்கள் ஏதும் உள்ளதா?

ஊடகவியலாளர் –  எமக்கு எதிராக அனைத்துலக  விசாரணை ஒன்று நடக்கும் போது, நீங்கள் கூறுவது சரியா?

அமைச்சர் – விசாரணைகள் நீதிக்குப் புறம்பான படுகொலைகளுக்கு எதிராகவே நடக்கிறதே தவிர, நீங்கள் கூறுவது போல அல்ல. ஒரு போரில் இழப்புகள் இருக்கும்.

ஊடகவியலாளர் – இராணுவப் பேச்சாளர், இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இராணுவப் பேச்சாளர் – நான் இங்கு ஒரு மோதலில் ஈடுபட விரும்பவில்லை.  இராணுவத்திற்கு எதிராக அமைச்சர் எதையும் குறிப்பிட்டார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு போரில் சில சம்பவங்களில் இழப்புகள் ஏற்படலாம் என்று புரிந்து கொண்டேன்.

அமைச்சர் – போர் தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக அல்ல. தயவு செய்து அதனை நினைவில் கொள்ளுங்கள். நான் எப்போதும், இந்த நிலைப்பாட்டை பேணி வருகிறேன்.

ஊடகவியலாளர் – அவர்கள் இறந்து போனவர்களை நினைவு கூரும் போது, கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருகிறார்கள் என்று அர்த்தமில்லையே?

அமைச்சர்- ஜேவிபியும் கூட அவ்வாறு தான் செய்கிறது. 1988இல் நிகழ்ந்தது படுகொலை என்றே ஜேவிபி கூறுகிறது. அதுபோலவே வடக்கிலும் நிகழ்ந்தது படுகொலை என்றே அவர்கள் கூறுகிறார்கள். இவை வேறுபட்ட பார்வைகள்.

ஊடகவியலாளர் – தற்போதைய அரசாங்கம், வெற்றி நாள் கொண்டாட்டங்களை நிறுத்தியது. நாங்கள் அதனைக் கொண்டாடும் போது ஆயிரக்கணக்கான இறப்புகளை கொண்டாடுவதாக இருக்கும் என்பதால் அதனை நிறுத்த முடிவு செய்ததாக கூறியது. ஆனால் அவர்கள் இப்போது ஒரு துக்க நாளை கடைப்பிடிக்கிறார்கள்?

அமைச்சர்- யார் அவர்கள்?

ஊடகவியலாளர் – வடக்கு மாகாண சபை. அதற்கு அரசாங்கம் இடமளிக்குமா?

அமைச்சர்-  அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் போதுமான பணிகளை செய்யாத நிலையில், தெற்கிலுள்ள அரசியல்வாதிகளைப் போலவே, இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். வாக்குகளைப் பெறுவதற்காக மதத்தையும் இனத்தையும் பயன்படுத்துகின்றனர். செல்வாக்கிழந்த  அரசியல்வாதிகள், இனம் மற்றும் மதம் என்பனவற்றை வலுவான ஆயுதங்களாக வைத்திருக்கின்றனர்.

ஊடகவியலாளர் – விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வீழ்ந்த பின்னர், சாலைகளுக்கு மறுபெயரிடப் போவதாக அவர்கள் கூறுகிறார்களே?

அமைச்சர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது நடக்க இடமளிக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *