மேலும்

பிபிசி செய்தியாளரை விசாரிப்பதில் இருந்து பின்வாங்கியது குற்றப் புலனாய்வுப் பிரிவு

சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ கீச்சகப் பக்கத்தில் கருத்து பதிவிட்டமை தொடர்பாக பிபிசி செய்தியாளரை விசாரணைக்கு அழைத்திருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு, தமது அழைப்பாணையை விலக்கிக் கொண்டுள்ளது.

நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கொள்கை விளக்க உரை சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ கீச்சகத்தில் வெளியாகியிருந்தது.

அதற்கு பதில் கருத்து ஒன்றை அஸ்ஸம் அமீன் பதிவிட்டிருந்தார். அதையடுத்து, சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ கீச்சகத்தில் உட்புகுந்து பதிவிடப்பட்டதாக அதிபர் செயலக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், அஸ்ஸம் அமீன் இன்று விசாரணைக்காக முன்னிலையாக வேண்டும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அழைப்பு விடப்பட்டிருந்தது.

இந்த தகவல் வெளியானதும், ஊடக சுதந்திரம் கேள்விக்குள்ளாவதாக பல்வேறு மட்டங்களிலும் கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று காலை தம்மைத் தொலைபேசி மூலமாகவும், கடித மூலமாகவும் தொடர்பு கொண்ட  குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னிலையாக வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளனர் என அஸ்ஸம் அமீன் தெரிவித்துள்ளார்.

“குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்று எனக்கு இன்று காலை தொலைபேசி மூலமும் கடித மூலமும், காவல்துறையினர் தகவல் அனுப்பியுள்ளனர்.

இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்காக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த விடயத்தில் பல வழிகளிலும் எனக்கு ஆதரவை வெளிப்படுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, அஸ்ஸம் அமீன் விசாரணைக்காக அழைக்கப்பட்டமை குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கம் கவலை வெளியிட்டிருந்ததுடன்,இது ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்துகின்ற ஒரு செயல் என்றும் கூறியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *