மேலும்

வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு பிரதேச சபைகளை கைப்பற்றியது கூட்டமைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையை ஐதேக மற்றும் சுயேட்சைக் குழுவின் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வில் புதிய தவிசாளர் தெரிவு  இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், நா.தணிகாசலமும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெ.ஜெயரூபனும் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டனர்.

இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில், இருவரும் தலா 11 வாக்குகளைப் பெற்றனர். கூட்டமைப்பு வேட்பாளருக்கு ஐதேக உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் ஆதரவு அளித்தனர்.

கூட்டணி வேட்பாளருக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 5 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐதேக உறுப்பினர் ஒருவரும், ஆதரவு அளித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

இருவரும் சமமான வாக்குகளைப் பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு வேட்பாளர் தணிகாசலம் தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து பிரதி தவிசாளர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நா. யோகராஜாவும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வனும், சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில், காமினி விக்கிரமபாலவும் போட்டியில் நிறுத்தப்பட்டனர்.

தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளித்த நிலையில், பிரதி தவிசாளர் பதவிக்கு அந்தக் கட்சி காமினி விக்கிரமபாலவை நிறுத்தியதை அடுத்து, கூட்டணி வேட்பாளர் தமிழ்ச்செல்வன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.

இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், யோகராஜாவுக்கு 14 வாக்குகளும், காமினி விக்கிரமபாலவுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன. யோகராஜா பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி தவிசாளர் தெரிவின் போது, கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளர் யோகராஜாவுக்கு  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஆதரவாக வாக்களித்தது. எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலை வகித்திருந்தது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையும் வசமானது

அதேவேளை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

நெலுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில்  இன்று பிற்பகல் நடந்த அமர்வில்  தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக துரைச்சாமி நடராஜசிங்கமும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் த.சிவராசாவும் போட்டியிட்டனர்.

வாக்கெடுப்பில் துரைச்சாமி நடராஜசிங்கம் 14 வாக்குகளைப் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட த.சிவராசா 13 வாக்குகளை பெற்றார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவர், நடுநிலை வகித்திருந்த நிலையில் இருவர் வாக்களிக்கவில்லை.

உப தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகேந்திரன் 15 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எஸ்.குகதாசன் 14 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

11 ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சை உறுப்பினர்கள் இருவரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *