ரணிலுக்கு ஆதரவா? – ரெலோ உயர்குழு முக்கிய முடிவு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியிடவுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, ரெலோவின் உயர்குழு, ஒருமனதான முடிவு ஒன்றை எடுத்துள்ளது என்றும் அந்த முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் ரெலோவின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரெலோவுக்கு இரண்டு ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ள கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் கட்சியான புளொட் இதுவரையில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இன்றும் நாளையும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இதில் இந்த விவகாரத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும்.
அதேவேளை, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், யோகேஸ்வரன் போன்றோர், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.