மேலும்

ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற காலவரம்புடன் கூடிய உத்தி – கனடா வலியுறுத்தல்

Canada_Flagஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளுடன், தெளிவான காலவரம்புடன் கூடிய உத்தி ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கனடா வலி்யுறுத்தியுள்ளது.

கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை கனடா வரவேற்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துடனான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஈடுபாடுகளை ஆதரிக்கிறது.

அனைத்து இலங்கையர்களுக்கும் அமைதியான, நல்லிணக்கமான, செழிப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில், உள்நாட்டு மற்றும் அனைத்துலக மனித உரிமைகள் கடப்பாடுகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோருகிறோம்.

மனித உரிமைகள் தொடர்பான ஆரம்ப கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக் கொள்வதுடன், காணாமல் போனோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டுள்ளதையும், வரவேற்கிறோம்.

அந்தப் பணியகம் முழுமையாக செயற்பட வேண்டும் என்று கோருகிறோம்.

இழப்பீடு, உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறல் பொறிமுறைகள், போன்றவற்றை உள்ளடக்கிய நிலைமாறு கால நீதி, மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள்,நல்லிணக்கம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல் போன்ற முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *