மேலும்

மாலைதீவும் சிறிலங்காவும் -3

monks-led violence (1)தெற்காசிய அரசியலில் சிறிலங்காவும் மாலைதீவும் சீன பொருளாதார, மூலோபாய தலையீடுகளினால் ஈர்க்கப்பட்டு, உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்தபோக்குடைய பல்வேறு குணாதிசயங்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்திய மேலாதிக்க நிலையை அச்சுறுத்தம் வகையில் இந்து சமுத்திரத்தால் சூழ்ந்துள்ள இரு தீவுகளும் உள்நாட்டில் மதவாத எழுச்சியினால் தாக்கம் கண்டு வருகின்றன.

மாலைதீவில் இந்து அடிப்படைவாத இந்திய மத்திய அரசு என்ற பார்வையை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், பிரதான எதிர்க்கட்சித் தலைவரை ஆளும் அதிபர் அப்துல்லா யமீன் நாட்டை விட்டு ஒடச் செய்திருக்கிறார்.

சிறிலங்காவில் பௌத்த மதவாத எழுச்சி தற்பொழுது தாண்டவமாடி வருகிறது. மேலைத்தேய இந்திய சார்பு கொள்கைகளை கொண்டது என்ற  பொதுக்கருத்தை கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அரசாங்கத்தை மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.

இருந்தபோதிலும் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான தாக்குகதல்களை கலாசார தேசியவாதமாக சித்தரித்து சர்வதேச அரங்கில் மென்மைப்படுத்தும் முயற்சிகளில் கொழும்புசார் ஊடகங்கள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன.

மாலைதீவின் அதிபர் யமீன் சீன பாகிஸ்தானிய கூட்டில் அதிக நம்பிக்கை கொண்டவராகவும் நாடாளுமன்ற ஜனநாயகவாதியாகவும் காட்டிக் கொள்வதில் அதிக அக்கறை கொண்டுள்ளார்

மாலைதீவு இஸ்லாமிய மதவாதம், இந்து மதவாத ஆதிக்கம் கொண்ட இந்திய அரசாங்கத்திற்கு எதிரான போக்கை கொண்டுள்ளது. இதனால் மாலைதீவின் நிலையம் இந்தியாவின் அக்கறையை அதிகரிக்க வைக்கிறது.

மாலைதீவு சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்திய சார்பு எதிர்கட்சிகளின் ஆதரவு இல்லாதபோதிலும் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.

மாலைதீவு நாட்டின் 70 சதவீத கடன் சீனாவிடம் இருந்து பெற்று கொள்ளப்பட்டிருக்கிறது. இது அந்த நாடு சீனாவிடம் பொருளாதார அடிமையாகப் போகும் நிலைக்குள் வந்திருப்பதைக் காட்டுகிறது.

சிறிலங்கா எவ்வாறு அம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியை சீனாவிடம் கையளித்ததோ அதேபோல சுமார் 16 தீவுகளை சீனாவிடம் மாலைதீவு கொடுத்து விட்டது.

இந்தியாவே முதல் என்ற வெளியுறவு கொள்கை மாலைதீவின் பாதுகாப்பு தொடர்பாக அந் தநாட்டின் பொதுப்பண்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அதிபர் யமீன் மதவாத சக்திகளின் துணையுடன் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.

சிறிலங்காவில் மதவாத சக்திகளின் துணையுடன் மகிந்த ராஜபக்ச பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதுடன், அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் எண்ணத்துடன் செயற்பட்டு வருவது  போல்த் தெரிகிறது .

இந்தநிலையில் மேலைத்தேய இந்திய சக்திகள் மிகுந்த அக்கறையுடன் சிறிலங்கா , மாலைதீவு அரசியல் நிலைமைகளை கவனித்து வருகின்றன.

உள்நாட்டில் தெற்காசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை சித்தாந்த ரீதியாக விதைத்து தமது செல்வாக்கு பலப்படுத்தலில் மும்முரமாக இருந்த மாலைதீவின் யமீன் அரசாங்கமும் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச தரப்பும் தமது புவியியல் நிலையத்தை புரிந்து கொண்டு செயலாற்ற முற்படுகின்றனர்.

அதேவேளை உலகம் இன்றைய சர்வதேச இராஜதந்திர நிலையில் இரண்டு பிரதான கூட்டுகளை மையமாக வைத்து நகர்கிறது.

அதில் ஒன்று சீன சார்பு கூட்டு. இது பொருளாதார முண்னேற்றத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு நகரும் வளம்மிக்க அல்லது பூகோள நிலைய முக்கியத்துவம் கொண்ட சிறிய அரசுகளின் கூட்டு.

மற்றையது மேலைத்தேய ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் கூட்டு. இந்த கூட்டு உலக அரசுகள் அடாவடித்தனம் கொண்டவை என்ற நம்பிக்கை உடையன. இந்த அரசுகளை நிறுவனமயமாக்கலில் அவற்றின் குணாதிசயங்களுக்க ஏற்ப தகுதி பிரிவுகளை உருவாக்கி தமது இராஜதந்திர பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தும் கூட்டு ஆகும்.

உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம், மனித உரிமைகள் மையம் என பல்வேறு சர்வதேச நிறுவனங்களை உருவாக்கி இவற்றினை கருவிகளாக கொண்டு இராஜதந்திர நகர்வுகளுக்கு பயன்படுத்துவதாகும்.

மாலைதீவும் சிறிலங்காவும் மதவாதத்திலும் பேரினவாதத்திலும் அரசியல் செய்யும் தேசங்களாக தெரிகிறது. இருந்தபோதிலும் நிறுவனத்துவவாதத்தை ஏற்றுக்கொண்டு சர்வதேச அரங்கில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தை கொண்டன.

இவர்களது தாரக மந்திரமாக இறையாண்மை ,ஜனநாயகம், சட்டவாக்க சபை, மனித உரிமை, நாடாளுமன்ற முறைமை ஆகியன உள்ளன. இந்த சொற்பதங்கள் மேலைத்தேய நிறுவனத்துவவாத நகர்வுகளுக்கு எதிரான கேடயங்களாக மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சிறிய இரு நாடுகள் மட்டுமல்லாது சீனா உட்பட பல்வேறு வல்லரசுகளும் கூட, மேலைத்தேய ஆதிக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கு இத்தகைய சொற்பதங்களை கொண்டு தம்மை சுதாகரித்து கொள்வதை வரலாறு காட்டி நிற்கிறது.

ஆகவே எதிர்வரும் காலங்களில் சிறிலங்காவில் பதவி ஏற்கும் அரசும் இதையே செய்யும் என்பதில் ஐயமில்லை. இதனை கருத்தில் கொண்டு சிறிலங்காவின் உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளால்- அது நாடாளுமன்றம் ஆயினும் உள்ளுராட்சி சபையாயினும், தமிழ் மக்கள் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் ஊடாக, தமது  இறையாண்மையை நோக்கிய நகர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதன்ள் ஊடாகவே நீண்டகால நலன்களை உறுதி செய்து கொள்ளமுடியும்.

– லண்டனில் இருந்து ‘புதினப்பலகை’க்காக லோகன் பரமசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *