மேலும்

அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும்?

social media blockஅவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில், சிறிலங்காவில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இனப்பதற்ற நிலை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்தவாரம், சமூக வலைத்தளங்களை முடக்கிய  அரசாங்கம், இந்த தற்காலிக தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் என்று கூறியிருந்தது. எனினும், இந்த தடை மேலும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபரின் செயலரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னான்டோ, சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று தன்னால் இப்போது கூற முடியாது என்றும், அது நிலைமைகளைப் பொறுத்த விடயம் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, அவசர காலச்சட்டத்தின் கீழேயே, சமூக வலைத்தளங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் இது தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டத்தை 14 நாட்கள் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *