மேலும்

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் கலந்துரையாடவில்லை – கோத்தா

Gotabaya Rajapaksa, Sri Lanka's former defence secretary and brother of former President Mahinda Rajapaksa speaks to the members of the Foreign Correspondents Association of Sri Lanka in Colombo2020 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடுவது தொடர்பாக, மகிந்த ராஜபக்சவுடனோ, பசில் ராஜபக்சவுடனோ இன்னமும் பேசவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

சகோதரர்கள் (மகிந்த, பசில்) இணங்கினால், 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று முன்னர் கூறியிருந்தீர்கள், இப்போது அதற்கான இணக்கத்தைப் பெற்றுவிட்டீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச-

“நாங்கள் இதுபற்றி இன்னமும் ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடவில்லை. அதற்கு இன்னமும் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

2020 அதிபர் தேர்தல் குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக இருக்கும்.

சரியான நேரம் வரும் போது, மகிந்த ராஜபக்ச ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார்.

2020 அதிபர் தேர்தலில் வேட்பாளராக நீங்களே போட்டியிடுவீர்கள் என்று விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மகிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் கூறிவருகிறார்கள். உங்களின் அனுமதியுடன் தான் அவர்கள் அதனைக் கூறுகிறார்களான என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச-

“இல்லை. அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. இவர்கள் மாத்திரமன்றி வேறு பலரும் அவ்வாறு கூறுகிறார்கள்.

அதிபர் வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசியல் சூழலைக் கவனத்தில் எடுக்கும் என்று நான் நினைக்கிறேன்.

குறித்த கட்சி அல்லது குழுவின் சார்பில்  மிகப் பொருத்தமானவர் தான் போட்டியிடுவார்.  அதுபோல, சிறிலங்காவின்  இறைமை மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது பிரிவு மக்கள், தமது அதிபர் வேட்பாளராக மிக பொருத்தமான ஒருவரைத் தான் முடிவு செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *