கி.பி.அரவிந்தன் – ‘அன்று சொன்னதும் இன்று நடப்பதும்’
நேற்றுப்போல் இருக்கிறது…… அரவிந்தன் அண்ணாவின் வார்த்தைகள். அவர் மறைந்தே இன்றுடன் மூன்று ஆண்டுகளாகி விட்டன.
அவரது மறைவு நிகழ்வதற்கு சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்சவை தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேன அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.
தேர்தல் நடக்கும் போது, அரவிந்தன் அண்ணாவுக்கு நோய் தீவிரமடைந்திருந்தது. கடுமையான உடல் உபாதைகள் அவரை வாட்டியெடுத்துக் கொண்டிருந்தது.
ஆனாலும் அவ்வப்போது, அவர் புதினப்பலகை சார்ந்த விடயங்களை கவனித்துக் கொண்டிருந்தார்.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்தமை ஒரு புறத்தில் ஆச்சரியம். இன்னொரு புறக்கத்தில் மிகப்பெரிய மகிழ்ச்சி அலை. அது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கானது அல்ல, மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சிக்கான மகிழ்ச்சி அலை.
ஆட்சிமாற்றத்தில் பங்காளியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருந்தது. எனவே, புதிய அரசாங்கத்தில் கூட்டமைப்பும் இணைந்து கொள்ள வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் ஊகங்கள் வெளியாகிக் கொண்டிருந்த தருணம் அது.
தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து தொடர்புக்கு வந்த அரவிந்தன் அண்ணா, தான் நலமாக இருப்பதாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், நேற்றைய செய்திகளும் மனதிற்கு உற்சாகம் தருகின்றன என்றும் செய்தி அனுப்புகிறார். (அவர் மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி என்று குறிப்பிட்டது ஆட்சி மாற்றத்தை)
பின்னர் தொடர்பு கொள்வதாக கூறிய அவர், மாலையில் தொடர்புக்கு வந்தார்.
அன்றும் அதற்குப் பின்னர் இரண்டு நாட்கள் கழித்தும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீண்டது உரையாடல்.
சிறிலங்கா அரசியலின் போக்கு, தமிழர்களின் எதிர்காலம் பற்றி தனது கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில், அரசாங்கத்தில் கூட்டமைப்பு பங்காளியாக இணைந்து கொள்வது பற்றிய பேச்சு வருகிறது. அப்போது அரவிந்தன் அண்ணா, மிக உறுதியாக, அத்தகைய வாய்ப்புகளை கூட்டமைப்பு ஏற்கக் கூடாது என்று குறிப்பிடுகிறார்.
அரசாங்கத்தில் இணைந்து கொண்டால், அது ஆபத்தாகி விடும் என்று, 1965இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் தமிழ் அரசுக் கட்சி இணைந்து கொண்டதால் ஏற்பட்ட விளைவுகளை விபரித்தார்.
அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டால் பதவி ஆசை வந்து விடும் என்றும், அதிகார ஆசைகளை விட்டு விட்டு உரிமைகளைப் பெறுவதற்கு அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உறுதியான கருத்துக்களை முன்வைக்கிறார்.
திருச்செல்வத்துக்கு அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டு, ஐதேக அரசாங்கத்தில் இணைந்து கொண்டிருந்தால், அப்போது தமிழ் அரசுக் கட்சிக்குள் வெடித்த முரண்பாடுகளையும், அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்ட அடையாள அட்டை சட்டமூலம் தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியதையும் நினைவுபடுத்தியிருந்தார்.
தமிழ் அரசுக் கட்சி அரசின் பங்காளியாக இணைந்து கொண்டதால், அதிருப்தியடைந்த தமிழ் இளைஞர்களும், மாணவர்களும், தீவிர கருத்துக்களைக் கொண்ட தலைவர்களும் தனிநாட்டுக் கோரிக்கையை முன்னெடுக்கத் தொடங்கினர்.
எனவே தான், மைத்திரி – ரணில் கூட்டு அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளியாகக் கூடாது என்ற கருத்தை அரவிந்தன் அண்ணா கடுமையாக வலியுறுத்தியிருந்தார்.
1965ஆம் ஆண்டு தமிழ் அரசுக் கட்சி எதிர்கொண்ட சிக்கலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஓரளவுக்கேனும் எதிர்கொள்கிறது. அரசின் முழுமையான பங்காளியாக மாறாவிடினும், சிறிலங்கா அரசுடன் இணங்கிச் செயற்பட எடுத்த முடிவு கூட்டமைப்பை நிலை தடுமாற வைத்திருக்கிறது.
சிறிலங்கா அரசின் தவறுகளுக்குத் துணைபோனதாக பழிசுமக்கவும், அதன் தவறுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்குள்ளேயும் சிக்கிப் போயிருக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அரவிந்தன் அண்ணா கூறிய கருத்தின் ஆழத்தை இன்றைய அரசியல் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது எந்தளவுக்கு தூரநோக்குக் கொண்டது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
தூரநோக்குடன் செயற்படக் கூடிய தலைமைகள் தமிழ் மக்களுக்கு இல்லாத இந்தச் சூழ்நிலையில், தூரநோக்குடன் துணிச்சலாக கருத்துக்களை வெளியிடக் கூடிய கி.பி.அரவிந்தன் அண்ணாவும் இன்று நம்மிடையே இல்லாது போனது எம் துரதிஷ்டமே.
இந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து கொண்டு, எம் பயணத்தை தொடர்கிறோம்.
– ‘புதினப்பலகை’ குழுத்தினர்
08.03.2018