மேலும்

லக்ஸ்மன் கிரியெல்லவுக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு?

lakshman kiriellaசட்டம், ஒழுங்கு அமைச்சை, தற்போது  அரச தொழிற்துறை அமைச்சராக உள்ள லக்ஸ்மன் கிரியெல்லவிடம் ஒப்படைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைய அமைச்சரவை மாற்றத்தின் போது, சாகல ரத்நாயக்கவிடம் இருந்து சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பு பறிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாக சட்டம், ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றிருந்தார்.

அந்த அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க ஐதேக திட்டமிட்டிருந்தது. எனினும், கூட்டு அரசாங்கத்துக்குள் உள்ளவர்களும், காவல்துறையின் உயர்மட்டத்தில் உள்ளவர்களும், சரத் பொன்சேகா இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், லக்ஸ்மன் கிரியெல்லவைத் தொடர்பு கொண்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியை பொறுப்பேற்கத் தயாரா என்று கேட்டுள்ளார்.

லக்ஸ்மன் கிரியெல்ல ஒரு சட்டவாளர். நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் இருக்கிறார். எனவே அவருக்கு இந்தப் பதவி பொருத்தமாக இருக்கும் என்றும் ஐதேக தலைமை கருதுகிறது.

எனினும், இந்தத் திட்டத்துக்கு லக்ஸ்மன் கிரியெல்ல இன்னமும் பதிலளிக்கவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *