மேலும்

சிறிலங்கா விற்பனைக்கா? – கேள்வி எழுப்பும் பாகிஸ்தான் ஊடகர்

Hambantota harbor‘சிறிலங்கா விற்பனைக்கு விடப்பட்டுள்ளதா?’ என மே 29 அன்று பி.பி.சி ஊடகம் கேள்வியெழுப்பியது. அதாவது ‘சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா பெரும் நெருக்கடியைச் சந்திப்பதால் தனது நாட்டின் முக்கிய சொத்துக்களை சீன நிறுவனங்கள் கையகப்படுத்துவதற்கு சிறிலங்கா அனுமதித்து வருகிறது’ என பி.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது.

2007ல், சீனாவின் எக்சிம் வங்கி சிறிலங்காவின் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்திக்காக முதன் முதலில் தனது நிதியை முதலீடு செய்தது. இத்துறைமுகம் 1.3 பில்லியன் செலவில் பூர்த்தி செய்யப்பட்டது. இதேபோன்று 900 மெகாவாட்  நுரைச்சோலை மின்னாலை நிர்மாணத்திற்காக சீனாவால் 1.35 பில்லியன் டொலர் செலவிடப்பட்டது.

2010ல், சிறிலங்காவில் விமான நிலையம் ஒன்றை அமைப்பதற்காக 200 மில்லியன் டொலர் நிதி சீனாவால் கடனாக வழங்கப்பட்டது. 2012ல், சீனாவால் மேலும் 810 மில்லியன் டொலர் நிதி சிறிலங்காவிற்குக் கடனாக வழங்கப்பட்டது.

2011ல், மகிந்த ராஜபக்ச அனைத்துலக துடுப்பாட்ட அரங்கம் 700 மில்லியன் ரூபா செலவிலும் அம்பாந்தோட்டைக்கு அருகில் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையம் 26 பில்லியன் ரூபா செலவிலும் சீனாவால் கட்டப்பட்டது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையும் சீனாவால் 776 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டது.

இதுமட்டுமல்லாது 15 பில்லியன் ரூபா செலவில் அம்பாந்தோட்டை விளையாட்டு வலயம் சீனர்களால் அமைக்கப்பட்டது. 2013ல், தொடருந்துப் பாதையை நிர்மாணிப்பதற்காக சிறிலங்காவிற்கு 272 மில்லியன் டொலர் நிதி சீனாவால் கடனாக வழங்கப்பட்டது.

2008 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில், சீனாவால் சிறிலங்காவிற்கு 6 பில்லியன் டொலர் கடனாகவும் உதவியாக வழங்கப்பட்டது. தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகம் கைவிடப்படும் நிலை காணப்படுகிறது. இதேபோன்று ராஜபக்ச தேசிய அரங்கும் கைவிடப்படும் நிலையிலும் மகிந்த ராஜபக்ச அனைத்துலக துடுப்பாட்ட அரங்கு மற்றும் மத்தல ராஜபக்ச அனைத்துலக விமானநிலையம் போன்றனவும் பயன்பாடற்ற நிலையில் காணப்படுகிறது.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கட்டுவதற்காக சீனாவிடமிருந்து பெற்ற கடனை அடைக்க முடியாது சிறிலங்கா பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்குரிய ஏழு கொள்கலன் முனையங்களில் நான்கை சீனா 35 ஆண்டுகாலக் குத்தகைக்கு எடுத்துள்ளது. அத்துடன் அம்பாந்தோட்டைக்கு அருகிலுள்ள 15,000 ஏக்கர் நிலமும் சீனாவால் நீண்டகாலக் குத்தகைக்குப் பெறப்படவுள்ளது.

நுரைச்சோலை நிலக்கரி ஆலையை அமைப்பதற்காக சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்துவதில் சிறிலங்கா இடரை எதிர்நோக்கியதால் ஏப்ரல் 17, 2017 அன்று இது செயலிழந்தது. மார்ச் 13, 2016 அன்று இந்த ஆலையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. 2012ல், இந்த ஆலையின் கொதிகலன்களில் ஒன்றில் ஒழுக்கு ஏற்பட்டது. ஆகவே இந்த ஆலையை சீனாவைப் பொறுப்பேற்குமாறு சிறிலங்கா கோரியுள்ளது.

மத்தல ராஜபக்ச அனைத்துலக விமானநிலையத்தை நிர்மாணிப்பதற்காக சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதிலும் சிறிலங்காவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தக் கடன் பிரச்சினையை சமாளிப்பதற்காக மத்தல அனைத்துலக விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டைத் துறைமுகம் உட்பட்ட பாரிய திட்டங்களின் சில பகுதிகளின் பொறுப்பை சிறிலங்கா சீனாவிடம் ஒப்படைத்துள்ளது.

‘சிறிலங்காவிற்கு பெரும் கடன் பிரச்சினை உள்ளது. பாரிய கட்டுமாணத் திட்டங்களை மேற்கொள்வதற்காக ஒரு பத்தாண்டிற்குள் பெருமளவு நிதியை சிறிலங்கா கடனாகப் பெற்றுக்கொண்ட போதிலும் இதனால் பெறப்படும் நன்மைகள் போதியதாகக் காணப்படவில்லை. இந்தக் கடனை மீளச் செலுத்துவது சிறிலங்காவிற்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கான மாற்றுத் தீர்வொன்றை சிறிலங்கா ஆராய்ந்து வருகிறது’ என Forbes செய்தி வெளியிட்டுள்ளது.

சீன நிறுவனங்களிடம் பாரிய திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கையளிப்பதற்கான ஏற்பாடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருகிறார். ‘நாங்கள் இதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. எமக்கு எமது பணமே வேண்டும், மாறாக உங்களுடைய வெறுமையான விமானநிலையங்கள் தேவையில்லை’ என சீனத் தூதுவர் ஜி ஜியான்லியாங்க், சிறிலங்கா பிரதமரிடம் தெளிவாகத் தெரிவித்ததாக Forbes குறிப்பிட்டுள்ளது.

சிறிலங்கா தற்போது 58.3 பில்லியன் டொலர் கடனைக் கொண்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் மொத்த வருமானத்தின் 95.4 சதவீத வருமானம் கடனை மீளச்செலுத்துவதற்காக வழங்கப்படுகிறது.

‘எமது நிலத்தை சீனாவிற்கு வழங்குவதை நாங்கள் விரும்பவில்லை. சீனா மட்டுமல்ல, எந்த நாடும் சிறிலங்காவிற்குச் சொந்தமான நிலங்களைத் தமக்குச் சொந்தமாக்கினால் அதை நாம் விரும்பமாட்டோம். அரசாங்கம் எமது நிலங்களைப் பாதுகாக்க வேண்டும், மாறாக இந்த நிலங்களை விற்கக்கூடாது’ என சிறிலங்காவைச் சேர்ந்த மீனவரான அருணா றொசாந்த, பி.பி.சி ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

வழிமூலம்      – The news
ஆங்கிலத்தில் – Farrukh Saleem
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *