மேலும்

திருகோணமலை அபிவிருத்தி திட்டங்கள்: இந்தியா- சிறிலங்கா கூட்டுச் செயலணி அமைக்கப்படும்

Gopal Baglayதிருகோணமலையில் வீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய அபிவிருத்தி,  துறைமுக மற்றும் ஏனைய தொழிற்துறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து கூட்டு செயலணி ஒன்றை அமைக்கவுள்ளன.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கோபால் பக்லே புதுடெல்லியில் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“திருகோணமலையில் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு, மற்றும் ஏனைய தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக இந்தச் செயலணியே மேலதிக கலந்துரையாடல்களை நடத்தும்.

இரண்டு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டை புதன்கிழமை செய்து கொண்டுள்ளன. பொருளாதார முதலீடு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பின் மூலம்,  இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகள் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

இந்த உடன்பாடு உட்கட்டமைப்பு, விவசாயம்,  கால்நடை உள்ளிட்ட சில துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.

குறிப்பாக, 500 மெகாவாட் இயற்கை எரிவாயு மின் திட்டம், கெரவலப்பிட்டியவில்  இயற்கை எரிவாயு முனையம் மற்றும் மிதக்கும் களஞ்சியம்,  சம்பூரில் 15 மெகாவாட் சூரிய மின் திட்டம், திருகோணமலை உயர்நிலை எண்ணெய்த் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆகியனவும் இந்த உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா- இந்தியா இடையே ஒரு கூட்டுச் செயலணி உருவாக்கப்பட்டு, வீதிகள் அபிவிருத்தி, பெற்றோலிய அபிவிருத்தி, மற்றும் திருகோணமலையில் ஏனைய தொழிற்துறைகள் தொடர்பாக ஆராயப்படும்.

கைத்தொழில் வலயங்கள், குறிப்பாக பொருளாதார வலயங்கள், வீதி அமைப்புகள், தொடருந்து துறை, கொழும்பில் கொள்கலன் முனையம் போன்றவற்றை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது குறித்தும் இந்தச் செயலணி அடையாளம் காணும்.

இது நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கான ஒரு பாதை வரைவு மட்டுமே. இவை எல்லாம் குறித்தும் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். இணக்கப்பாடுகள் ஏற்பட வேண்டும். குறிப்பாக மேல் நிலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பாக பேசப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *