மேலும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்

christof-heynsசிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act)  சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன.  

திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையிடலாளர் கிறிஸ்ரோப் கெய்ன்சும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக மற்றும் ஆபிரிக்காவில் நிலவும் தொடர்புபட்ட சட்டத்திற்கான பிரிட்டோரியா நிறுவகம் (ICLA) ஆகியன இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இந்தக் கூட்டறிக்கையை ICLA நிறுவகத்தின் இயக்குனரும், திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையாளருமான பேராசிரியர் கிறிஸ்ரோப் கெய்ன்ஸ் மற்றும் ICLA நிறுவகத்தின் ஆலோசகரான ரொபி பிஷர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

‘சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக சீர்திருத்தங்ளை உள்ளடக்கி 2016ல் முன்வைக்கப்பட்ட சட்ட வரைவானது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தமானது சிறிலங்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அனைத்துலக மனித உரிமைகள் நியமங்களுக்கு முரணாக அமைந்துள்ளன.

நாடாளுமன்றில் சட்டவரைவை முன்வைப்பதற்கு முன்னர் அது தொடர்பாக வெளிப்படையாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடன் பயங்கரவாதத்தைத் தடை செய்வதற்கான சட்ட வரைவானது மனித உரிமைகள் சட்டத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும்’ என ICLA நிறுவகத்தால் வெளியிடப்பட்ட கூட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின்  புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது ஏப்ரல் 06, 2017 அன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு திருத்தங்களின் பின்னர் இச்சட்டமூலத்தின் பிரதியானது ஒக்ரோபர் 2016 அன்று சிறிலங்காவின் உள்நாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இது பின்னர் அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2016ல் வெளியிடப்பட்ட இச்சட்ட மூலமானது அனைத்துலக மனித உரிமை விதிமுறைகளைக் கருத்திற் கொள்ளத் தவறியுள்ளதாக சிறிலங்கா வாழ் சட்டவாளர்கள் மற்றும் பலர் பரவலாக விமர்சனங்களை முன்வைத்தனர். இச்சட்ட மூலம் தொடர்பாக அனைத்துலக வல்லுனர்கள் மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்த வல்லுனர்கள் பல்வேறு சாதகமான மாற்றங்களை முன்வைத்ததன் பின்னர் இதில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

குறிப்பாக பயங்கரவாதம் தொடர்பான வரையறை, இதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் மற்றும் நிபந்தனைகள், தடுத்து வைக்கப்படும் இடங்கள், உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியயங்களைப் பயன்படுத்துதல் போன்றன தொடர்பில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டன.

எனினும், சிறிலங்கா அரசாங்கமானது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்களை சட்டத்தில் உட்சேர்க்க வேண்டுமாயின் அனைத்துலக மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்ப இதில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என கெய்ன்ஸ் மற்றும் பிஷர் சுட்டிக்காட்டியுள்ளனர். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் இது தொடர்பாக பொதுமக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என பேராசிரியர்களால் வெளியிடப்பட்ட கூட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றமானது தனிப்பட்ட ரீதியாக தயாரிக்கப்பட்டதாகவும் இதில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் பின்பற்றப்படவில்லை எனவும் இது தொடர்பில் சிவில் சமூகத்தினர் மற்றும் உள்நாட்டு பங்குதாரர்களுடனும் அனைத்துலக பங்குதாரர்களுடனும் சிறிலங்கா எவ்வித ஆலோசனைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் ICLA வெளியிட்டுள்ள கூட்டு ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘சிறிலங்கா நாடாளுமன்றில் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக வெளிப்படையாகக் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் இச்சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது தொடர்பாக ஏற்கனவே கருத்துக்களை வெளியிட்டிருந்த உள்நாட்டு மற்றும் அனைத்துலக ஆலோசகர்கள் மேலும் தமது கருத்துக்களை வழங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்’ என கெய்ன்ஸ் மற்றும் பிஷர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் பயங்கரவாதம் தொடர்பாக இச்சட்ட மூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரையறை தொடர்பிலும் அதிருப்தி அடைந்துள்ளனர். 2016ல் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தில் ‘பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட குற்றங்கள்’ தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள வரையறையானது நியாயமற்றதாகவும் இது இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் துஸ்பிரயோகப்படுத்துவதற்கான ஆபத்தையும் கொண்டுள்ளதாகவும் தற்போது வெளியிடப்பட்டுள்ள கூட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது அசாதாரண அதிகாரங்களை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் காணப்படாத அதிகாரங்களை இச்சட்டம் கொண்டுள்ளது. இவ்வாறான அசாதாரண அதிகாரங்கள் அடக்குமுறையைப் பிரயோகிப்பதற்கு துணைபுரிகின்றன’ என இக்கூட்டு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு பல்வேறு அதிகாரங்களை வழங்குகிறது. குறிப்பாக கைது செய்வதற்கான அதிகாரம், சந்தேகத்தின் பேரில் நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கான அதிகாரம், சொத்துக்களை சுவீகரிப்பதற்கான அதிகாரம், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரம், போக்குவரத்துத் தடைகளை விதிப்பதற்கான அதிகாரம், நிறுவனங்களைத் தடைசெய்வதற்கான அதிகாரம் எனப் பல்வேறு அசாதாரண அதிகாரங்களை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

இவை அனைத்தும் அடிப்படை உரிமைகளை அடக்குவதற்குப் போதுமானதாகும். இதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் இச்சட்டத்தில் குறிப்பிடப்படும் குற்றம் இடம்பெற்றால் அக்குற்றவாளி இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின் மூன்றாவது பகுதியில் மூன்று வகையான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது முதலாவது வகையாக பயங்கரவாதக் குற்றமும் இரண்டாவது வகையாக பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட குற்றமும் மூன்றாவது வகையாக தொடர்புபட்ட குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என கெய்ன்ஸ் மற்றும் பிஷர்  ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒருவர் ‘தடுப்புக் கட்டளையின்’ கீழ் எவ்வித குற்றங்களும் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் நான்கு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட முடியும். இது மனித உரிமை நெறிமுறைகளுக்கு முரணானதாகும். எவ்வித குற்றங்களும் நிரூபிக்கப்படாதவிடத்தும் சந்தேக நபர்கள் இரண்டு ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்படுவதற்கான அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது.

இச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் ஒருவர் 12 மாதங்களின் பின்னரே நீதி நடைமுறைக்குள் கொண்டு வரப்படுவார். குற்றம் நிரூபிக்கப்படாத சந்தேகநபர்கள் 2 வருடங்கள் வரை தடுத்து வைக்கப்படுவதால் இவர்கள் நீண்ட காலம் தடுப்பில் இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் குற்றவியல் சட்டத்தில் உள்ளது போன்று சட்டவாளர் ஒருவரின் உதவியை நாடமுடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் சட்டவாளருக்கு அனுமதி கிடைக்கும் போது மட்டுமே இவர் தடுத்துவைக்கப்படும் சந்தேகநபரைச் சந்திக்க முடியும் எனவும் விசாரணைகள் இடம்பெறும் போது இதற்கு அனுமதிக்கப்படாது எனவும் குற்றவியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக கெய்ன்ஸ் மற்றும் பிஷர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

‘தற்போது சீர்திருத்தப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில், சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள காவல் நிலையத்திற்கு சட்டவாளர்கள் சென்று அங்கிருக்கும் பொறுப்பதிகாரியைச் சந்திக்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால் குறித்த சந்தேகநபர் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படும் எனக் கருதப்படும் சந்தர்ப்பத்தில் சட்டவாளர் , சந்தேக நபரைச் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம். இது தடுத்து வைக்கப்படுவோர் தமது அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கைகளை அணுகுவதற்குத் தடையாக உள்ளது’ என கெய்ன்ஸ் மற்றும் பிஷர்  ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவர் சுயாதீனமாக சட்ட ஆலோசனையை எவ்வித வரையறையுமின்றிப் பெற்றுக் கொள்வதற்கு இச்சட்டம் தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் உத்தரவாதமளிக்க வேண்டும் என சித்திரவதைகள் மீதான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்  கெய்ன்ஸ் மற்றும் பிஷர் ஆகியோர் கருத்துரைத்துள்ளனர்.

ஆங்கிலத்தில்  – Easwaran Rutnam
வழிமூலம்        – The Sunday leader
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *