மேலும்

சிறிலங்கா இராணுவத்துக்குள் உள்ள புற்றுநோய்

karunasena-hettiarachi-army hq (4)ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த சிறிலங்கா இராணுவ வீரர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்ற்றியில் எவ்வாறு பாலியல் சம்பவங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது தொடர்பான அதிர்ச்சியான ஒரு பதிவை The Associated Press   ஊடகம்  அண்மையில் வெளியிட்டிருந்தது.

அமைதி காக்கும் படையில் பணியாற்றிய சிறிலங்கா இராணுவத்தினர் 12 வயதுச் சிறுவர் மற்றும் சிறுமிகளைக் கூடத் தமது பாலியல் இச்சைகளுக்காகப் பயன்படுத்த விரும்பியதாக இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டனையை எதிர்நோக்குவதென்பது மிகவும் அரிதானதாகும். இதனால் பாலியல் வன்முறைகளுக்கு உட்படும் பாதிக்கப்பட்டவர்கள் நீதியைப் பெற்றுக் கொள்வதுமில்லை. கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா அமைதி காக்கும் படையினர் மீது 2000 வரையான பாலியல் மீறல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அமைதி காக்கும் படையினர் மற்றும் இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் மீறல்கள் என்பது முன்னரை விடத் தற்போது மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. இவ்வாறான மீறல் குற்றச்சாட்டுக்களில் 300 வரையான சம்பவங்கள் சிறுவர்கள் மீதான பாலியல் சம்பவங்களாகும். இதில் சம்பந்தப்பட்ட ஒரு சில குற்றவாளிகளே தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாலியல் மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் ஐ.நா அதிகாரிகள், விசாரணையாளர்கள் மற்றும் ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் பாலியல் மீறல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 23 நாடுகளிடமும் AP  ஊடகம்  நேர்காணலை மேற்கொண்டது.

இவ்வாறான பாலியல் மீறல்களில் ஈடுபட்ட பல இராணுவ வீரர்கள் தொடர்ந்தும் தமது நாட்டு இராணுவத்தில் அங்கம் வகிப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. ‘ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த போது பாலியல் மீறல்களில் ஈடுபட்ட சில சிறிலங்கா இராணுவ வீரர்கள் தற்போதும் தமது இராணுவத்தில் பணியாற்றுவதாக சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளையில் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா இராணுவ வீரர்கள் ஐக்கிய நாடுகள் சபையால் தொடர்ந்தும் ஹெய்டி மற்றும் வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். சிறிலங்கா இராணுவ வீரர்கள் மீது சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட போதிலும் ஐ.நா தொடர்ந்தும் சிறிலங்கா வீரர்களைத் தனது அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறது’ என AP ஊடகம்  மேற்கொண்ட நேர்காணலில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 200 வீரர்கள் மாலிக்கு அனுப்பப்படும் ஐ.நா அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கவுள்ளதாக அண்மைய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. சிறிலங்காவானது தனது பாதுகாப்புத் துறையைச் சீர்திருத்துவதில் அக்கறை காண்பிக்கின்றது என்பதை நம்புவதற்கு எவ்வித காரணங்களும் காணப்படவில்லை.

ஹெய்டியில்  பணியில் ஈடுபடும் அமைதி காக்கும் படையினரில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் மீறல்களில் ஈடுபட்டனர் என்பது மட்டுமல்லாது சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதும்  2015ல் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பின்னரும் கூட சிறிலங்கா இராணுவத்தினர் பல்வேறு பாலியல் மீறல்களில் ஈடுபட்டனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான சாட்சியங்கள் உள்ளன என்பதையும் எவரும் மறந்துவிடக் கூடாது.

சிறிலங்காவிற்குள் இடம்பெற்ற வன்முறைகளை ஆராயும் போது இனம் என்கின்ற காரணியை நினைவிற் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். சிறிலங்கா இராணுவத்தில் அங்கம் வகிக்கும் இராணுவத்தினர் பெரும்பான்மை இனமான சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாவர். ஆனால் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழர்களாவர்.

ஆங்கிலத்தில்  – Taylor Dibbert
வழிமூலம்        – The diplomat
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>