மேலும்

கொழும்பு நிதி நகரத் திட்டத்தை இந்தியா எதிர்க்கவில்லை – சீன நிறுவனம்

port-cityதெற்காசியாவில் மிகவும் பொருத்தமான வணிகக் கேந்திரமாக சிறிலங்கா தலைநகர் கொழும்பு  விளங்குவதாக கொழும்பு நிதிநகரத் திட்டத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியான லியாங் தௌ மிங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்தினால் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில், மேற்கொள்ளப்படும், கொழும்பு நிதி நகரத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.

‘கொழும்பு தெற்காசியாவிலேயே மிகவும் சுத்தமான, வாழ்வதற்கேற்ற நகரமாக மாத்திரம் இருக்கவில்லை.

தெற்காசியாவில் உள்ள எந்தவொரு நாட்டுடனும். பகைமையைக் கொண்டிராத ஒரு நாட்டின் தலைநகராகவும் இருக்கிறது. பிராந்திய வணிக கேந்திரமாக உருவாக்கக் கூடிய இடத்தில் கொழும்பு இருக்கிறது.

தெற்காசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களால் கொழும்புக்கு வர முடியும். எந்த நாட்டவர் என்ற பிரச்சினையின்றி இங்கு தொழில் செய்ய முடியும்.

தெற்காசியாவின் சிங்கப்பூராக கொழும்பை மாற்ற முடியும்.

பிரித்தானிய மாதிரி மற்றும் நவீன வணிகத்துக்குத் தேவையான தொழிலாளர் சட்டங்கள் உள்ளிட்ட சொந்தமான சட்டமுறைமைகளின் அடிப்படையில், கொழும்பு நிதி நகரம் ஒரு அனைத்துலக வணிக கேந்திரமாக, நிதி கேந்திரமாக இருக்கும்.

இங்கு சீனாவில் இருந்து மாத்திரமன்றி, உலகில் எல்லா நாடுகளில் இருந்தும் முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.

இந்தியச் சந்தைகளுக்கு கொழும்பு நிதி நகரம் பிரதான சேவையை வழங்கும். வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இந்தியர்கள் அதற்காக டுபாய் அல்லது மொரிசியசை நாடுவதற்குப் பதிலாக கொழும்பு நிதி நகரத்தை நாடலாம். இது அருகேயும், வசதியானதாகவும் இருக்கும்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கான எதிர்ப்பை இந்தியா கைவிட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை இது ஒரு வணிக பகுதி என்பதை இந்திய வர்த்தகர்களும், இந்திய அரச அதிகாரிகளும் புரிந்து கொண்ட பின்னரே இந்த எதிர்ப்பை கைவிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய வர்த்தகர்களும் நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன.

அடுத்த ஆண்டில் இருந்து 13 பில்லியன் டொலர் முதலீடுகளை கொழும்பு நிதி நகரத்திட்டத்தினால் கவர முடியும்.

கடலில் இருந்து 269 ஹெக்ரெயர் நிலப்பரப்பை உருவாக்கி அமைக்கப்படும் இந்த நிதி நகரத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும்.

நிலத்தை உருவாக்கும் பணிகள் 2019ஆம் ஆண்டு முழுமையாக நிறைவடையும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *