மேலும்

வெள்ளை வான் குறித்து கோத்தாவுடன் தொலைபேசியில் பேசிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா

Major General Prasanna de Silvaமீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்  கோத்தாபய ராஜபக்சவிடம், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா விளக்கமளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் குடியிருக்கும் மீரிஹான பகுதியில், கடந்த திங்கட்கிழமை இரவு போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் பிடிபட்டது.

அதில், இருந்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினரிடம் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்குச் சொந்தமான கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இது மகிந்த மற்றும் கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்யும் முயற்சி என்று விமல் வீரவன்ச குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், வெள்ளைவான் பிடிபட்ட மறுநாள், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.

என்ன நடந்தது என்பது குறித்து கோத்தாபய ராஜபக்சவுக்கு விரிவான தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா.

அத்துடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கோத்தாபய ராஜபக்சவிடம் கூறியிருக்கிறார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு மிக நெருக்கமானவராக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, கடந்த ஜனவரி 09ஆம் நாள், கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலர் பதவியை விட்டு விலகிய பின்னர், முதல் முறையாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *