மேலும்

சிறிலங்காவில் ஜனநாயகம் பலம் பெறுமா? – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆசிரியர் தலையங்கம்

mahinda-maithriசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிக ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவும் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் நாடாளுமன்றைக் கலைத்தார்.

ஆகஸ்ட் 17ல் இடம்பெறவுள்ள தேர்தலானது சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பிரதமராவதற்கும் இதன் ஊடாக நாட்டின் அரசியலிற்குள் நுழைவதற்குமான வாய்ப்பை வழங்கியுள்ளது.

தான் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகப் பதவி வகிக்கலாம் என்கின்ற கனவுடன் மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரியில் அதிபர் தேர்தலை நடத்தினார். ஆனால் இத்தேர்தலில் ராஜபக்சவுக்கு எதிராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன அதிக வாக்குகளைப் பெற்று நாட்டின் அதிபராகினார். இது உண்மையில் எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும்.

ராஜபக்ச சிறிலங்காவில் இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக அதிபராகப் பணியாற்றியவர் என்ற வகையில் மக்களுக்கு இவரது அரசியல் நன்றாகத் தெரியும். சிறிலங்காவில் பல ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்ற வகையில் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச பெரும் ஆதரவைப் பெற்றிருந்தார்.

ஆனால் இவர் தனது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்த அதிகாரம் மிக்க அரசியல் தந்திரோபாயங்களால் மக்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் மோசடிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றன இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இவற்றை எல்லாம் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

இது தொடர்பான ஐ.நா போர்க் குற்ற அறிக்கை செப்ரெம்பரில் வெளியிடப்படவுள்ளது.

ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முன்வந்ததானது சிறிசேனவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்குள் மிகவும் ஆழமான பிளவு ஏற்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே வாக்களித்தது போன்று அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான போதியளவு ஆதரவைப் பெற்றிராததாலேயே நாடாளுமன்றைக் கலைத்து தேர்தலை நடத்தத் தீர்மானித்தார்.

இது தொடர்பில் வாக்காளர்களின் ஆணையைப் பெறுவதென சிறிசேன தீர்மானித்தார். ஐ.ம.சு.கூட்டணியின் உறுப்பினராக ராஜபக்ச தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளமை சிறிலங்காவின் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்சவிற்கும் சிறிசேனவிற்கும் இடையில் பல்வேறு கோட்பாட்டு சார் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் மிக நெருங்கிய உறவைப் பேணினார். கொழும்புத் துறைமுகத்தில் சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்துவதற்கு ராஜபக்ச தனது அனுமதியை வழங்கியிருந்தது மட்டுமன்றி, சீன வங்கிகளிடமிருந்து ஐந்து பில்லியன் டொலர்களும் சிறிலங்காவால் கடனாகப் பெறப்பட்டுள்ளது.

சீனக் கடன்கள் மற்றும் சிறிலங்காவில் இடம்பெறும் சீனத் திட்டங்கள் தொடர்பான சிறிசேனவின் ஆதரவாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சீனக் கடனின் 70 சதவீதத்தை கடன் வழங்குனர்களிடமிருந்து பெற்று வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால் தொடர்ந்தும் சீனாவுடன் ஒப்பந்தம் செய்வார் என சிலர் கூறுகின்றனர்.

ராஜபக்ச இத்தேர்தலின் ஊடாக சிறிலங்காவின் பிரதமராக பதவி வகிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார் என இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். சிறிசேனவால் நிறைவேற்றப்பட்ட சில சட்ட சீர்திருத்தங்கள் மூலம் பிரதமராக வருகின்ற எவரும் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிக அதிகாரங்களைப் பெற முடியும் என்பதாலேயே ராஜபக்ச பிரதமராக தெரிவுசெய்யப்பட்டால் தாமும் நலன் பெறலாம் என இவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

சிறிசேன இதுவரை வெளிப்படையாக ராஜபக்சவை ஆதரித்து கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. இத்தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக ஏற்கனவே சிறிசேன அறிவித்துள்ளார். ‘ராஜபக்சவிற்கு ஆதரவாக இளைஞர்கள் வாக்களிக்கமாட்டார்கள். ஏனெனில் ராஜபக்ச தனது காலத்தில் இழைத்த பல்வேறு குற்றங்களை இந்த இளைஞர்கள் நன்கு உணர்வர். ராஜபக்சவின் அதிகாரத்துவ ஆட்சியை இவர்கள் நன்கறிவர்’ என ஜூலை 14 அன்று சிறிலங்காவின் அதிபர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவின் பெயர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் உள்ளதால் இம்முறை நிச்சயமாக இக்கூட்டணி தோல்வியுறும்  எனவும் சிறிசேன எதிர்வுகூறியுள்ளார்.

ராஜபக்சவுக்கு எதிரான ஐ.ம.சு.கூட்டணி உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இந்த முன்னணியானது கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சிறிசேனவிற்கு ஆதரவளித்திருந்தது. இதன்மூலம் ரணிலின் தலைமையில் கடந்த ஜனவரியில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆளுங்கட்சியாகச் செயற்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலில் வெற்றி பெற்றால் சிறிலங்காவின் எதிர்கால அரசியலில் பல்வேறு சீர்திருத்தங்கள் இடம்பெறலாம். தற்போது சிறிலங்காவின் ஜனநாயகம் சீரழிந்துள்ளது. இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டை ஆட்சி செய்தால் மீண்டும் சிறிலங்காவில் ஜனநாயகம் பலம்பெறும் என எதிர்வு கூறப்படுகிறது.

வழிமூலம்         – வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *