மேலும்

ஆயுள்தண்டனைக் குற்றவாளிகளை மாநில அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு

gavelகொலை, வல்லுறவு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அதேவேளை, ராஜீவ்காந்தி படுகொலை வழக்குக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

குற்ற நடைமுறைச் சட்டம் 432 மற்றும் 433ஆம் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யும் மாநில அரசு அதிகாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 பேரின் தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதை அடுத்து, அவர்களை விடுதலை செய்ய ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் தான் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முந்தைய இத்தகைய தடை உத்தரவில் சில மாற்றங்கள் செய்து இந்த புதிய தடையை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

நீதிபதி தத்து தலைமையிலான அரசியலமைப்பு அமர்வு இது குறித்து சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:

ஆயுள் தண்டனையை ஆயுள் முழுவதும் தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட குற்றவாளிகளை மாநில அரசுகள் விடுதலை செய்ய உத்தரவிட முடியாது.

அதேபோல், குறைந்தது 20 அல்லது 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்ட ஆயுள்தண்டனைக் கைதிகளையும் மாநில அரசுகள் விடுதலை செய்ய தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை செய்யாத வழக்குகளில் மாநில அரசுகள் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யலாம் என்று மாநில அரசுகளின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறது.

மத்திய சட்டவிதிகளின்படி, தடா பிரிவில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் அல்லது கொடூரமான குற்றங்களான பாலியல் வல்லுறவு, படுகொலை வழக்குகளிலும் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளை மாநில அரசுகள் மன்னித்து விடுதலை செய்ய முடியாது.

மாநில அரசுகளின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 72 மற்றும் 161 ஆகியவற்றின் படி முறையே நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர் ஆகியோரின் அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு உட்பட்டதே.

தமது ஜூலை 2014 தடை உத்தரவுகள் மீதான இந்த மாற்றங்கள், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கு பொருந்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை தொடர்பான விசாரணை தொடரும் எனத் தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *