மேலும்

வெள்ளை வான் விவகாரம் – மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் 4 மணிநேரம் விசாரணை

Major General Prasanna de Silvaமீரிஹான பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் வெள்ளை வான் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவின் தளபதியும், பாதுகாப்பு அமைச்சில் இணைப்பதிகாரியாகப் பணியாற்றுபவருமான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான், கடந்த திங்கட்கிழமை இரவு மீரிஹாவின் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

இதில் இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மூன்று மெய்க்காவலர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக நேற்று மீரிஹான காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர் அந்த வெள்ளை வான் தனது பாதுகாப்பு அணியினரால் பயன்படுத்தப்பட்டது என்பதையும், கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி தனது சொந்தப் பாவனையில் இருந்தது என்றும் ஒப்புக்கொண்டார்.

தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த கைத்துப்பாக்கியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நுகேகொடவில் உள்ள தனது வீட்டில் இருந்து அந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கொழும்புக்கு வருமாறு தனது பாதுகாவலர்களுக்கு தானே உத்தரவிட்டதாகவும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா கூறியுள்ளார்.

கொழும்பில் இருந்து தனது பாதுகாவலர்களுடன் இணைந்து கண்டிக்குச் செல்லவிருந்தாகவும், அவர் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.

எனினும், இராணுவத்தின் இலக்கத் தகடு மாற்றப்பட்டு, சாதாரண இலக்கத்தகடு பொருத்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *