மேலும்

இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படைக்கு உரிமை உள்ளதாம்

china-submarineஇந்தியப் பெருங்கடலில், தனது நலன்களைப் பாதுகாக்கின்ற உரிமையை சீனக் கடற்படை கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா பரந்த மனதுடன் இடமளிக்க வேண்டும் என்றும் சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ சிந்தனையாளர் குழாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் உள்ள சீன இராணுவத்தின் சிந்தனையாளர் குழாமைச் சேர்ந்த உயர்நிலை அதிகாரியும், இராணுவ விஞ்ஞான அக்கடமியின் புலமையாளருமான சோவூ போ, சீன அரசின் அதிகாரபூர்வ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் தான் சீனாவின் சக்தி தொடர்பான நலன்கள் அதிகளவில் உள்ளதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சீன நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச் சென்ற பின்னர், கடந்த மே மாதம் அரபிக் கடல் வழியாக கராச்சி துறைமுகத்துக்கு சீனாவின் யுனான் வகை நீர்மூழ்கிகள் பயணம் செய்தது குறித்து இந்தியா கொண்டுள்ள கவலை தொடர்பாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

“சீன கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் இந்தியப் பெருங்கடலில் தொடர்ச்சியாக பிரசன்னமாவது எதற்காக?

உலகின் மிகப்பெரிய வர்த்தக நாடு என்ற வகையில், இந்தோ- பசுபிக்கின் கடல்சார் பாதுகாப்பு சீனாவுக்கு முக்கியத்துவமானது.

ஆட்களின் பாதுகாப்பு, சொத்துக்களின் பாதுகாப்பு, முதலீடு போன்ற தனது கடல்கடந்த நலன்களை சீனக் கடற்படை பாதுகாக்க வேண்டியுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை இந்தியப் பெருங்கடலின் விளம்பில் தான் உள்ளன.

சக எண்ணெய் இறக்குமதியாளர் என்ற வகையில் சீனாவின் நோக்கத்தை இந்தியா நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பகுதி வழியாகவே சீனாவின் ஐந்தில் நான்கு எண்ணெய் இறக்குமதிகள் இடம்பெறுகின்றன.

இந்தியப் பெருங்கடலை தனது கொல்லைப்புறமாக கருதினால் கூட, அங்கு போட்டிக்கு யாரும் வரக்கூடாது என்று நினைத்தால் கூட இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை இந்தியாவினால் மட்டும் உறுதிப்படுத்த முடியாது.

எதற்காக கடற்கொள்ளை முறியடிப்பில், இந்தியா, சீனா உள்ளிட்ட 20க்கு அதிகமான நாடுகள் ஈடுபடுகின்றன?

இந்தியப் பெருங்கடலில் மூலோபாய செல்வாக்குச் செலுத்துவதற்காக இந்தியாவுடன் முட்டிமோத சீனா விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *