மேலும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – ராஜபக்சக்களைத் தாக்குகிறார் கருணா

karunaவரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,

“கடந்த அதிபர் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இருந்தது. இப்போது அவர் எப்படி மாறமுடியும்? அவரால் முடியாது.

எனவே, ராஜபக்ச தோல்வியடைவார், அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லை என்ற அவரது நிலைப்பாடு சரியானதே. அதற்கு அவருக்கு அதிகாரமும் உள்ளது.

வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது.

அவர்கள் புலம்பெயர்ந்தோர், இனவாதம், போர் பற்றியே பேசுகின்றனர். தமிழ் மக்களின் மனோ நிலை அத்தகைய தேசியவாதத்துக்கு எதிரானது.

பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்ப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வரும்.

புலம்பெயர்ந்தோர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்தனர். அவர்களுக்கு ராஜபக்சவின் மீள்திரும்பல் பயத்தை அளித்துள்ளது.

குறிப்பாக முஸ்லிம்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ தான் வாக்களிப்பார்கள்.

மாகாணங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். இப்போது யாரும் தனிநாடு கேட்கவில்லை, அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைத் தான் கேட்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் பெருமளவு தமிழர்கள், காவல்துறையில் இணைந்துள்ளனர். காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மக்கள் மிதவாத அரசியலையே விரும்புகின்றனர். அவர்கள் அடிப்படைவாதத்தையோ இனவாதத்தையோ விரும்பவில்லை.

போருக்குப் பின்னர், பல விடயங்களை மாற்றியிருக்க முடியும். ஆனால் ராஜபக்ச அதனைச் செய்யவில்லை. அவர் பல தவறுகளையும், கெட்ட விடயங்களையும் செய்தார்.

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தப்பியோடினார். நாமும் கூட மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்தோம். ஆனால் தப்பியோடவில்லை.

இப்போது பசில் ராஜபக்ச திரும்பி வந்திருக்கிறார். தலையீடுகளை செய்கிறார். அவரால் அரசியலில் தொடர்புபட்டால் வெற்றியடைய முடியாது.

சுசில் பிரேமஜெயந்தவும், பசில் ராஜபக்சவும் இரகசியமாக பல தவறுகளையும், கெட்ட செயல்களையும் செய்துள்ளனர்.

பல சாராயத் தொழிலதிபர்களுக்கு வேட்புமனு வழங்கப்பட்டுள்ளது. எனவே எதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வேட்புமனு வழங்கவில்லை?

எந்த தவறுகளையோ, கெட்ட செயல்களையோ செய்யாத பெண் அரசியல்வாதி ஒருவருக்கும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஒரு மத்திய குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். எனக்கு இன்னமும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

எனவே தான் கட்சியின் யாப்புக்கு ஏற்ப மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற உத்தரவை பெற வேண்டி ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *