மேலும்

இலங்கையர்களின் நீண்டகாலக் காத்திருப்பு வீணாகக் கூடாது – அமெரிக்க ஊடகம்

ranil-maithri-cbk-y.k.sinhaசிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படும் சிறிலங்காவில் கடந்த பத்தாண்டாக குடும்ப ஆட்சி நிலவியது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனாவின் ஆதிக்கம் சிறிலங்காத் தீவில் நிலைநாட்டப்படுவதற்கு இக்குடும்ப ஆட்சி வழிகோலியது.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் அதிகாரம் மிக்க அமைச்சுகளுக்குப் பொறுப்பாக இருந்த இவரது இரண்டு சகோதரர்களும் நாட்டின் 70 சதவீத வரவுசெலவுத் திட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இவர்கள் மட்டுமல்ல இவர்களுடன் இணைந்து ராஜபக்சவின் அரசாங்கத்தில் கடமையாற்றிய 29 உறுப்பினர்கள் பல்வேறு உயர் பதவிகளை வகித்தனர். ராஜபக்சவின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நெருங்கியவர்கள் நாட்டின் சிவில் சேவைகள் மற்றும் தொழிற்துறை போன்ற பல்வேறு முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தப்பட்டனர். இதனால் கடந்த பத்தாண்டாக சிறிலங்கா ஒரு அதிகாரம் பொருந்திய குடும்ப ஆட்சி இடம்பெறும் ஒரு தீவாக மாறியது.

ராஜபக்சவின் குடும்ப ஆட்சியை இல்லாதொழிப்பதற்காக இவ்வாண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சிறிலங்காவின் சிறுபான்மை மக்கள் உட்பட 20 மில்லியன் வரையான மக்கள் ராஜபக்சவிற்கு எதிராக அணிசேர்ந்தனர். இதற்கான தலைமைப் பொறுப்பை மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார். இவர் முன்னாள் விவசாயி ஆவார். இவர் கடந்த காலங்களில் சிறிலங்காவின் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்திருந்தார்.

ராஜபக்சவை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக கடந்த நவம்பர் மாதம் சிறிசேன அறிவித்தார். இதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ராஜபக்சவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இரவு விருந்துபசார நிகழ்வில் சிறிசேன கலந்துகொண்டார். இந்த விருந்துபசாரமானது தனக்கு எதிராக எந்தவொரு எதிர்ச்சக்திகளும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கின்ற ராஜபக்சவின் மமதையின் ஒரு வெளிப்பாடாகவே நோக்கப்பட்டது.

இதனை ராஜபக்சவும் தெரிவித்திருந்தார். தன்னை எதிர்த்து நிற்க எவரும் இல்லாததால் அதனைக் கொண்டாடுவதற்காகவே விருந்து வழங்குவதாக ராஜபக்ச தெரிவித்திருந்தார். ஆனால் இதற்குச் சில நாட்களின் பின்னர் ராஜபக்சவை எதிர்த்து தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும் இதற்காக ராஜபக்சவிடம் மன்னிப்புக் கோருவதாகவும் சிறிசேன அறிவித்தார். இதுவே சிறிலங்காவின் அரசியலில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியது.

இதற்கு ஆறு வாரங்களின் பின்னர் சிறிலங்கா அதிபர் தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றார். இந்நிலையில் பல மில்லியன் கணக்கான மக்கள் சிறிசேனவின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2005ல் ராஜபக்ச சிறிலங்கா அரசாங்கத்தைப் பொறுப்பெடுத்தார். அப்போது நாட்டின் வடக்கில் போர் தீவிரம் பெற்றிருந்தது. ராஜபக்ச அதிபராகப் பதவியேற்ற பின்னர் 2009ல் உள்நாட்டுப் போர் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. ராஜபக்சவால் போர் வெற்றி கொள்ளப்பட்டதானது சிங்கள மக்கள் மத்தியில் இவருக்கான வரவேற்பை மேலும் அதிகரித்தது. இதனால் ராஜபக்சவின் குடும்பத்தினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி போன்றன நாட்டில் குடும்ப ஆட்சி ஒன்று நிலைபெறுவதற்கு வழிவகுத்தன.

போர் வெற்றியைப் பெற்றுத் தந்த ராஜபக்ச தமது மீட்பர்கள் என சிங்களப் பெரும்பான்மை சமூகம் கருதியது. இதுவே நாட்டில் ராஜபக்சவின் குடும்பத்தினர் முக்கிய பொறுப்புக்களை வகிப்பதற்கும் குடும்ப ஆட்சி நீடிப்பதற்கும் வழிகோலியதாக அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் மூத்த ஆய்வாளர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மூன்றாவது தடவையாகவும் ராஜபக்ச அதிபராவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அரசியல் யாப்பின் மூலம் இது சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான அதீத நம்பிக்கையின் மறுபக்கமாகவே தனது ஆட்சிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அதிபர் தேர்தலை நடாத்துவதற்கான ஒரு உந்துதலை ராஜபக்ச பெற்றுக்கொண்டார். இவரது அதீத நம்பிக்கைக்கு சிறிசேனவின் தேர்தல் வெற்றி முற்றுப்புள்ளி வைத்தது.

வெவ்வேறு அரசியல் அவாக்களுடன் வாழும் சிறிலங்காவின் சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் அரசியற் கட்சிகள் ராஜபக்சவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட சிறிசேனவின் கைகளைப் பலப்படுத்தினர்.

சிறிசேனவின் தந்தையார் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் புகழ்பெற்ற ஒருவராவார். இவரது தாயார் பாடசாலை ஆசிரியையாகக் கடமையாற்றியிருந்தார். இவ்வாறான பின்புலத்தைக் கொண்ட சிறிசேன வடமத்திய மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றைச் சொந்த இடமாகக் கொண்டவர்.

1971ல் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இடம்பெற்ற மார்க்சிய கிளர்ச்சிகளில் சிறிசேன பங்குபற்றியிருந்தார். இதற்காக இவர் ஒரு ஆண்டிற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் இவர் தனது சொந்த ஊரில் விவசாயம் செய்து கொண்டு விவசாயத்துறை மற்றும் அரசியல் சார் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து 1989ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவும் மதிப்பு மிக்க ஒருவராக சிறிசேன விளங்குகிறார். சுகாதார அமைச்சராகப் பணியாற்றிய போது புகைப்பிடித்தலை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். ஆனாலும் இவரது இந்த நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை.

‘நாட்டின் முழுப் பொருளாதாரமும் சமூகக் கட்டமைப்பு முழுவதும் ஒரு குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது’ என சிறிசேன முன்னர் தெரிவித்திருந்தார். இவர் சிறிலங்காவின் அதிபராகப் போட்டியிடும் போது தனது தேர்தல் பரப்புரையில் 100 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் என வாக்குறுதி வழங்கியிருந்தார். இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்து சட்ட ஆட்சியை நிலைநாட்டுவதற்குப் பாடுபடுவேன் என சிறிசேன உறுதியளித்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் சிறிலங்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சிறிசேன, அதிபருக்குள்ள அதிகாரங்களை மட்டுப்படுத்தியுள்ளார். இது தற்போது அரசியல் சட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்கள் மீது ஊழல் மோசடி விசாரணைகள் இடம்பெறுவதற்கு சிறிசேன எவ்விதத்திலும் தடைக்கல்லாக இருக்கவில்லை. இது தொடர்பில் ராஜபக்ச தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிறிசேன அமைதி காத்தார்.

இவ்வாறான சம்பவங்கள் சிறிலங்காவின் அரசியலில் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன என அரசியல் பொருளியலாளரும், யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆய்வாளருமான அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் இன்னமும் சீர்செய்யப்பட வேண்டியுள்ளதாக ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் மேற்கொள்ளப்படும் என சிறிசேன வாக்குறுதியளித்திருந்தார். இதுவும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என சிறிசேன அறிவித்துள்ளார். இவரது தாமதமான செயற்பாட்டால் வெளிநாட்டு முதலீடுகள் முடங்குவதற்கும் மேலும் அரசியற் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்குத் தடையாக உள்ளதாக சிலர் விமர்சித்துள்ளனர்.

இதேவேளையில், ஐ.தே.க வரும் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறுவதற்கான சாத்தியங்கள் நிலவுகின்றன. இது சிறிசேனவை மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. சிறிசேன தனது ஜனநாயக சார் மதிப்பையும் பாதுகாக்க வேண்டியுள்ளதுடன் தனது சொந்தக் கட்சி தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு உதவி செய்தல் ஆகிய இரண்டையும் சமப்படுத்த வேண்டியதொரு இக்கட்டான சூழலில் சிறிசேன தள்ளப்பட்டுள்ளார்.

‘கட்சியின் தலைமைக்கு எதிராகச் செயற்பட்டு, அவரைத் தோற்கடித்து, பின்னர் அவரது கட்சி பல ஆண்டுகளுக்கு அரசியலில் வெற்றி பெற முடியாதவாறு தடைகளைப் போடுகின்ற ஒரு நயவஞ்சக அரசியலை நடாத்தும் ஒரு சராசரி மனிதனாக இருப்பதற்கு சிறிசேன விரும்பவில்லை’  என அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் பல்வேறுபட்ட தரப்பினர் தற்போதும் செயற்படுகின்றனர். சிலர் ராஜபக்ச மீண்டும் அரசியலில் நுழைய வேண்டும் என்பதற்கு ஆதரவாக பேரணிகளை நடத்துகின்றனர். சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளியிடப்படவுள்ள ஐ.நா அறிக்கையானது சிறிலங்காவின் அரசியலில் அங்கம் வகிக்கும் பலரை விசாரணை செய்வதற்கு உந்துசக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுடன் எத்தகைய உறவைப் பேண வேண்டும் என்பது தொடர்பாகவும், சீனா மற்றும் அமெரிக்காவுடன் எத்தகைய வெளியுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்எனவும் குறிப்பாக சீனாவின் ஆதரவுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் இவை நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்குமா என்பது தொடர்பாகவும் சிறிசேன மிகவும் ஆழமாக ஆராயவேண்டும்.

‘காலம் நகர்ந்து கொண்டு செல்கிறது. ஆகவே சிறிலங்கர்களின் நீண்டகாலக் காத்திருப்பு வீணாகக் கூடாது. இத்தகைய காத்திருப்பை இழப்பதற்கான நேரம் இதுவல்ல. ஆனால் மக்களின் அதிருப்தியும் அதிகரிக்கிறது. சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பமுற்றுள்ளதானது அரசாங்கம் மீதான மக்களின் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்பதையே சுட்டிக்காட்டுகிறது’ என அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

  • ஆங்கிலத்தில் – Sean braswell
  • வழிமூலம்    – OZY
  • மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *