மேலும்

மகிந்தவின் தேசியப்பட்டியல் பரிந்துரை – மைத்திரியின் அனுமதிக்காக காத்திருப்பு

mahinda-maithreeஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் உள்ளடக்குவதற்கு, மகிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட அட்மிரல் வசந்த கரன்னகொட உள்ளிட்டோரின் பட்டியலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருநாகல மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதுடன், அவரது ஆதரவாளர்கள் பலரும் பல்வேறு மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில், தனக்கு ஆதரவான பலரையும் உள்ளடக்கிய பட்டியல் ஒன்றையும் மகிந்த ராஜபக்ச தேசியப்பட்டியல் ஆசனங்களை நிரப்புவதற்காக கையளித்திருக்கிறார்.

இந்தப் பட்டியலில் முன்னாள் கடற்படைத் தளபதியும், ஜப்பானுக்கான தூதுவராக இருந்து அண்மையில் திருப்பி அழைக்கப்பட்டவருமான அட்மிரல் வசந்த கரன்னகொடவும் அடங்குகின்றார்.

கொழும்பு உள்ளிட்ட இடங்களில் தமிழ் இளைஞர்களை கடத்தி கப்பம் கோரியது மற்றும் இரகசிய தடுப்பு முகாம்களை வைத்திருந்தமை, படுகொலைகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவரது பெயரும் அடிபடுகின்ற நிலையிலேயே தேசியப்பட்டியல் ஆசனத்தை கோரியிருக்கிறார் மகிந்த ராஜபக்ச.

மேலும் மகிந்த ராஜபக்சவினால் தேசியப்பட்டியலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளோரின் பட்டியலில், முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயத்திலக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலர் சரித்த ஹேரத், அரசியலமைப்பு சட்ட நிபணர் ஜெயம்பதி விக்கிரமரத்ன, விஞ்ஞானியும் வெளியீட்டாளருமான  தேவிந்து குமாரதுங்க, ஆகியோர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, தேசியப்பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமில்லை என்றும், புலமையாளர்கள் மட்டுமே அதில் இடம்பெறுவர் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *