மேலும்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த கட்சிகள், குழுக்கள் தீவிர முயற்சி

TNApressஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் நோக்கில், அதிகளவு கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகவுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தெரிவு செய்தல், கூட்டணிகளை உறுதிப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆசனங்களை கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றி, தமது பேரம் பேசும் பலத்தை அதிகரித்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைக்கும் நோக்கில், சில கட்சிகளும், குழுவினரும் வேட்பாளர்களை நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள், போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து, தனியான சுயேட்சைக் குழுக்களை நிறுத்தவும் சில தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான சந்திப்புகள், கலந்துரையாடல்கள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அறியப்படுகிறது.

மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதாகவும், அவர்கள் தாம் மாகாணசபைத் தேர்தலில் பெற்ற விருப்பு வாக்குகளைக் காட்டி, கூட்டமைப்புத் தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கும் பாணியில் கடிதங்களை அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கிடையில், யாழ்ப்பாணம், அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக ஏற்கனவே இணக்கம் காணப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வன்னி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான வேட்பாளர் ஒதுக்கீடே இன்னமும் முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்தமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் இம்முறையும் போட்டியிடுவார்கள் என்றும், யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அப்பாத்துரை விநாயகமூர்த்தி உடல் நிலை கருதி போட்டியிட மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கடந்தமுறை தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் இம்முறை யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என்றும் தெரியவருகிறது.

இதற்கிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், மலையகத் தமிழர்கள் இருவரை யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களில், வேட்பாளர்களாக நிறுத்துவதற்கான பேச்சுக்களை மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி ஆரம்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.