மேலும்

முக்கிய தலைவர்கள் மெதமுலானவுக்கு வரவில்லை – மகிந்தவுக்கு ஏமாற்றம்

mahinda-rajapaksaமெதமுலானவில் இன்று நடத்திய கூட்டத்தில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்காதமை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ச தனது எதிர்கால அரசியல் திட்டத்தை மெதமுலானவில் இன்று நடந்த கூட்டத்தில் அறிவித்திருந்தார்.

மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரும்  இந்தக் கூட்டத்தில் 100க்கும் அதிகமான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என்று மகிந்த ஆதரவுத் தரப்பினர் பரப்புரை செய்திருந்தனர்.

ஆனால், மிகக் குறைந்தளவு நாடாளுமன்ற உறுப்பினர்களே இன்று மெதமுலானவுக்கு வந்திருந்தனர்.

அத்துடன், இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களான நிமால் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜெயந்த, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் கலந்து கொள்வர் என்று மகிந்த ராஜபக்ச எதிர்பார்த்திருந்தார்.

ஆனால் அவர்கள் எவரும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இன்றைய கூட்டத்தில், சமல் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச மற்றும் சரத் என் சில்வா போன்றவர்களும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *