மேலும்

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் அனுமதிக்காக காத்திருப்பு

sri-lanka-emblemஇந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து விபரித்த அவர்,

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத தூதுவர்களாகப் பணியாற்றியவர்கள் திருப்பி அழைக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்குப் புதியவர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனவரி 8ம் நாளுக்கு முன்னர், நியமிக்கப்பட்ட துறைசார் இராஜதந்திரிகள் அல்லாத வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும், திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் உள்ள சிறிலங்கா தூதுவரின் பதவி மட்டும் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ளது.

சிறிலங்காவுக்கு வெளிநாடுகளில் 63 தூதரகங்களும், தூதரகப் பணியகங்களும் உள்ளன.

அரசியல் செல்வாக்கில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் திருப்பி அழைக்கப்பட்டதால், 40 தூதரகங்களில் தூதுவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இவற்றில் 33 பேரை நியமிப்பதற்கு  அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமானவர்கள் அடையாளம் காணப்பட்டு, சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான புதிய தூதுவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனினும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவினால் அவரது நியமனம் அங்கீகரிக்கப்படும் வரையில், புதுடெல்லியில் உள்ள இந்தியத் தூதுவர் தொடர்ந்து பணியாற்றுவார்.

வெளிநாடுகளுக்கான தூதுவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள 33 பேரில், 17 பேர், சிறிலங்கா வெளிவிவகாரச் சேவையில் உள்ளவர்களாவர்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்டின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கின்றனர்.

முறைப்படியான அங்கீகாரம் பெறாமல், அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *