மேலும்

கேன்ஸ் விழாவில் ஈழப்போரின் பின்புலத்தைக் கொண்ட ‘தீபன்’ திரைப்படம் – விருதுக்குப் போட்டி

dheepan-cannes-film-festival (1)பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஜக்குவஸ் ஓடியேட்டால் இயக்கப்பட்ட ‘தீபன்’ (Dheepan)  என்கின்ற திரைப்படம் வியாழக்கிழமை இடம்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட ஒருவர் அகதி முகாமிலுள்ள ஒரு இளம் பெண்ணையும் ஒன்பது வயதுடைய சிறுமி ஒருவரையும் சந்திக்கின்றதை மையப்படுத்தி இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்கதாபாத்திரங்கள் பிரான்சிற்குள் செல்வதற்கு இறந்த குடும்பம் ஒன்றின் அடையாளங்களை தமது போக்குவரத்திற்கான சான்றுகளாகப் பயன்படுத்துவதெனத் தீர்மானிக்கின்றனர்.

பிரெஞ்சு மொழி தெரியாத இவர்கள் பிரான்சின் பாரிசின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஓரிடத்தை அடைகின்றனர். அங்கே போதைப்பொருட் கும்பல்கள் சேதமடைந்த கோபுரத்தின் கட்டடத்திற்குள் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

தனது சொந்த நாடான சிறிலங்காவில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் வடுக்களைத் தற்போதும் தாங்கி நிற்கும் தீபன் பண்ணையில் பராமரிப்பாளராகவும், இவரது மனைவி எனத் தன்னை அடையாளப்படுத்தும் இளம்பெண்ணான யாழினி போதைப்பொருள் தலைவர்களில் ஒருவரின் மாற்றுத்திறனாளியான மாமா ஒருவரைப் பராமரிப்பராகவும் சமையலாளராகவும் பணிபுரிகிறார்.

dheepan-cannes-film-festival (1)

தீபன் படத்தின் ஒரு காட்சி

இவர்கள் மூவரும் போதைப்பொருள் கும்பல்களால் தாக்குதலுக்கு உள்ளான போது, தீபன் தனது ‘குடும்பத்தைப்’ பாதுகாப்பதற்காக மீண்டும் தன்னை ஒரு போர் வீரனாக மாற்றவேண்டி ஏற்படுகிறது.

இத்திரைப்படத்தின் கதாநாயகனாக வகிக்கும் நாவலாசிரியர் அந்தோனிதாசன் ஜேசுதாசன் சிறிலங்காவில் போராளியாகச் செயற்பட்டிருந்தார். மூன்று ஆண்டுகளின் பின்னர் இவர் அங்கிருந்து தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றார்.

இதன் பின்னர் 1993ல் போலிக் கடவுச்சீட்டில் பிரான்சிற்குள் நுழைந்த இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.

‘2009ல் போர் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. எனினும் சிறிலங்காவில் வாழும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தற்போதும் இராணுவத்தினரால் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது’ என தீபன் திரைப்படத்தின் கதாநாயகனான அந்தோனிதாசன் ஜேசுதாசன் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இத்திரைப்படத்தின் 50 சதவீதம் இதில் நடிக்கும் கதாபாத்திரத்தின் சுயசரிதையை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதே.

France Cannes Dheepan Photo Call

தீபன் இயக்குனர் ஜக்குவஸ் ஓடியாட்டுன், நாயகனாக நடித்த ஜேசுதாசன் அந்தோனிதாசன், நாயகி காளீஸ்வரி சிறீனிவாசன், சிறுமி கிளாடின் விநாசித்தம்பி.

‘இன்று வரை சிறிலங்கா இராணுவத்தால் எத்தனை பேர் போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான உண்மையான தகவல் எமக்குத் தெரியாது’ என இவர் மேலும் குறிப்பிட்டார்.

‘உலக வரைபடத்தில் சிறிலங்காவை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் தீபன் என்கின்ற இத்திரைப்படமானது முற்றுமுழுதாக வேறுபட்ட கோணத்தில் நிகழும் சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாகும்’ என ‘தீபன்’ திரைப்படத்தின் இயக்குனரான ஓடியேட் தெரிவித்தார்.

‘சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்டதல்ல. இந்த வன்முறைச் சம்பவமானது இதன் பின்னணியாக உள்ளது. இதன் முழுமையான கதையிலும் கதாபாத்திரங்கள் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்’ என இயக்குனர் குறிப்பிட்டார்.

இத்திரைப்படமானது ஐரோப்பாவால் விவாதிக்கப்படுவது போல் ‘அரசியலை நோக்காகக்’ கொண்டதல்ல எனவும் உலகின் மிக மோசமான போர்க் களங்களுக்குள் அகப்பட்டுப் பின்னர் அரசியல் தஞ்சம் கோரும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அதனை அடைவதற்கு எவ்வாறான போராட்டங்களைச் சந்திக்கின்றனர் என்பதை விபரிப்பதாகவே இத்திரைப்படம் இயக்கப்பட்டுள்ளதாக ஓடியேட் தெரிவித்தார்.

dheepan-cannes-film-festival (3)

கேன்ஸ் விழாவில் தீபன் திரைப்படக்குழுவினர்.

இவர் திரைப்படத்தை இயக்கிய போது இதன் கலைஞர்களுடன் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் மூலம் உரையாடியிருந்தார்.

‘வித்தியாசமான மக்களின் கண்களின் ஊடாகவும் இந்த உலகம் தொடர்பான இவர்களின் பார்வை எவ்வாறு உள்ளதென்பதையும் மையப்படுத்தி’ பிரான்சின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே ஓடியேட் இதனைத் தயாரித்துள்ளார்.

தீபன் என்கின்ற இத்திரைப்படமானது ‘புலம்பெயர்வதில் ஏற்படும் நெருக்கடிகளை தெட்டத் தெளிவாக விபரிக்கும் ஒரு துப்பறியும் திரைப்படமாக உள்ளதாக’ லண்டனிலிருந்து வெளிவரும் Evening Standard  பத்திரிகை தெரிவித்துள்ளது.

‘வார்த்தைகளால் கூறமுடியாத மனிதத் துடிப்புடன் வசீகரமான, மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒரு திரைப்படமாக ‘தீபன்’ காணப்படுகிறது’ என Screen International என்கின்ற சினிமாத்துறை சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள, கேன்ஸ் திரைப்பட விழாவின் உயர் விருதான Palme d’Or  ஐப் பெற்றுக்கொள்வதற்காகப் போட்டியிடும் 19 திரைப்படங்களில் ‘தீபன்’ திரைப்படமும் ஒன்றாகும்.

வழிமூலம்        – ஏஎவ்பி
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *