மேலும்

சிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை – என்கிறது சிங்கள அமைப்பு

Flag-sinhalaசிறிலங்கா சிங்களவருக்குரிய நாடு என்பதால், தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்களக்கொடியே நாட்டின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சுவர்ண ஹங்ச பதனம என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன தெரிவித்தார்.

கொழும்பில், நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “சிங்களவர்கள் ஒருபோதும் இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்பட கூடாது. சிங்களவர் என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

ஏனையோர் சிறுபான்மையினத்தவராகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

ஆங்கிலேயரிடம் இருந்து சிறிலங்கா சுதந்திரம் அடைந்தபோது, இந்த நாட்டில் தமிழருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியே சிங்களவர்களிடம் நாட்டை ஒப்படைத்தனர்.

அதனால் சிங்களவர்களின் தேசியக்கொடியையும், தேசிய கீதத்தையும் நாட்டில் வேறு எந்த இனத்திற்கும் வழங்குவதை எம்மால் அனுமதிக்க முடியாது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது சிங்களவர்களை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடிகளை ஏந்திக் கொண்டிருந்தமையிலும் எவ்வித தவறும் இல்லை.

நாட்டின் தேசியக்கொடி சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக மட்டுமே அமைய வேண்டும்.

தமிழ், முஸ்லிம் இனங்கள் மட்டுமின்றி வேறு எந்த இனத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமையக் கூடாது.

தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற மூன்று இனத்தவரையும் ஒன்றிணைத்து சிங்களவர் என அடையாளப்படுத்தக் கூடாது.

சிங்கள மக்களை சிங்களவர் என்றும் ஏனைய இனத்தவரை சிறுபான்மையினர் என்றுமே அடையாளப்படுத்த வேண்டும்.

இன்று அரசாங்கம் நாட்டின் சிங்கள மக்களின் உரிமையை பாதுகாப்பதில்லை.

இந்தநிலை தொடர்ந்தால் தமிழர் சிங்கள புத்தாண்டைத் தமதாக்கிக் கொண்டது போன்று நாட்டையும் தமதாக்கிக் கொண்டு பெரும்பான்மையாகவும் தன்னை அடையாளப்படுத்தி கொள்வர்.

13 ஆவது திருத்தத்தில் நாட்டின் அரசியல் தலைமைகள் செய்த பிழையினாலேயே தமிழர்கள் தமது உரிமைகள் என்ற பெயரில் நாட்டை கோருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *