மேலும்

புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடைய மேலும் 5 பேர் கைது – தீவகத்தில் பெரும் பதற்றம்

punkuduthivu-vithyaபுங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்றுமாலை மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களைத் தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தீவகத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

புங்குடுதீவில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் தம்மிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஒன்று திரண்டதால், சந்தேக நபர்களைப் பாதுகாக்க முடியாமல் சிறிலங்கா காவல்துறையினர் திணறினர்.

இதனால், அவர்களை புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, குறிகாட்டுவான் ஆகிய காவல்நிலையங்களுக்கு கொண்டு சென்ற சிறிலங்கா காவல் துறையினர் பின்னர், கடல் வழியாக, கடற்படையின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுமக்கள் சிறிலங்கா காவல்துறைக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது, வீதிகளில் ரயர்கள் கொளுத்தப்பட்டதுடன், வீதிகளில் ஆங்காங்கே தடுப்புகள் போடப்பட்டன.

காவல்நிலையங்களும் பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் சிறிலங்கா காவல்துறையை சேர்ந்த ஒருவர் காயமற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமாலை தொடங்கிய இந்தப் போராட்டங்கள், இரவு வரை நீடித்தன.

கடந்த 13ம் நாள் பாடசாலையில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த மாணவி வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர், படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சகோதரர்களான மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, நேற்று மேலும் ஐவர் கைது செய்ய்யப்பட்டனர்.

மாணவி காணாமற்போனமை தொடர்பாக உடனடியாக சிறிலங்கா காவல்துறை நடவடிக்கையில் இறங்காதமை குறித்து கடுமையான விமர்சனங்கள் பொதுமக்கள் மத்தியில் உள்ளன.

நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், வடக்கில் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு சிறிலங்கா காவல்துறையின் பொறுப்பின்மையும் ஒரு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதேவேளை, மாணவி வித்தியா கொலைக்கு நீதி கோரி வடக்கில் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

நேற்று நல்லூர் பகுதியில் இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட போராட்டம் ஒன்றில், இந்தக் கொலைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் சார்பில், சட்டவாளர்கள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

மாணவி வித்தியா கொலைச் சம்பவம், வடக்கில், பாடசாலை சமூகங்கள், பல்கலைக்கழகச் சமூகம், சிவில் சமூகம், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கொதித்தெழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *