மேலும்

மீண்டும் முளை கொள்வோம்

mullivaikkal-2015நம் நெஞ்சமெலாம் பதைபதைக்க, உலகம் முழுதும் வேடிக்கை பார்த்திருக்க, ஆயிரக்கணக்கான எமது உறவுகள் கொன்றழிக்கப்பட்ட கோரம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டன.

தமிழ்த் தேசியத்தைச் அழித்து- அதன் ஒட்டுமொத்த அரசியல் பலத்தையும் சிதைத்து, எம்இனத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்த சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் நிகழ்த்திய ஊழித் தாண்டவம் அது.

‘பயங்கரவாதம்’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் எமது இனத்தின் ஒட்டுமொத்த உரிமைகளும் அடக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சிங்களத்தில் காலடிக்குள் வீழ்த்தப்பட்டது.

அதை உலகமே ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது.

முள்ளிவாய்க்காலில் கொடூரங்கள் நிகழ்வது தெரிந்தும், அதைத் தடுக்கும் திராணியற்றோ- விருப்பின்றியோ ஒதுங்கியிருந்த உலகத்தின் மனச்சாட்சி அதற்குப் பின் கொஞ்சம் கசிந்துருகினாலும், நாமிழந்தவை அனைத்தும் இழந்தவையே.

அவை ஒருபோதும் எம் கைக்கு மீண்டும் வரப்போவதில்லை.

தேடற்கரிய பொக்கிசங்களையும், காலம் கொடுத்த வரங்களையும், அந்த வரலாற்றுப் பேரூழி எம்மிடம் இருந்து பறித்துச் சென்றது.

தமிழ்மக்களின் உரிமைப் போராட்டத்தை இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தி, அதற்குத் தலைமை தாங்கிச் சென்ற தலைமையை எம்மிடம் இருந்து பிரித்து, தேசிய விடுதலை இயக்கத்தை சிதைத்தது இந்த முள்ளிவாய்க்கால் பேரூழி.

ஒன்றல்ல இரண்டல்ல…… ஆயிரக்கணக்கான உறவுகள், உயிர்கள் பறிக்கப்பட்டு, இன்னும் ஆயிரக்கணக்கானோர் நடைபிணமாக்கப்பட்டனர்.

உறவுகள், சொத்துகள், சுகங்கள், என்று எல்லாவற்றையும் இழந்து, ஒரு சொட்டுத் தண்ணீருக்கும், ஒரு வாய் சோற்றுக்கும் கையேந்திக் கும்பிடும் நிலைக்கு எம்மைக் கொண்டு வந்து நிறுத்தியது அந்த வரலாற்றுப் பெருந்துயர்.

ஆறு ஆண்டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆறவில்லை.

பட்ட காயங்களில் இருந்தும், மனங்களில் விழுந்த கீறல்களில் இருந்தும் இன்னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்கிறது.

போரின் விளைவுகள் பலவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, அனுபவிக்கும் நிலைக்கு இன்று ஈழத் தமிழினம் தள்ளப்பட்டு நிற்கிறது.

முள்ளிவாய்க்காலில் முடிந்த போர், முடிவுறா வலியையும், ரணங்களையும் எம்மக்கள் முன் விட்டுச் சென்றிருக்கிறது.

ஆயிரக்கணக்கானோர் இன்னமும் சொந்தஇடம் சேர முடியாமலும், சொந்த பந்தங்களுடன் இணைய முடியாமலும், தவிக்கின்றனர்.

போருக்கு நடுவே காணாமற்போன உறவுகளைத் தேடியலையும் துயரம், நீண்டுசெல்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்த்தப்பட்ட அந்த அநீதிகளுக்கு இன்னமும், பொறுப்புக் கூறப்படவில்லை.

குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல், நீதியை எதிர்பார்த்து காத்துநிற்கும் மக்கள் முன், வெறுப்பேற்றிக் கொண்டலைகின்றனர்.

இறுதிப் போரின் அவலங்களுக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட காயங்களை ஆற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்த அனைத்துலக சமூகம் இன்னமும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை.

முழுமையான- சுதந்திரமான- நம்பகமான- அனைத்துலக விசாரணைக்காக இன்னமும் போராட வேண்டிய நிலையில் தான் தமிழ்மக்கள் இருக்கின்றனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை – தமது உரிமைகளுக்காக மட்டும் போராடிய தமிழர்கள், இப்போது, தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்மக்களின் உரிமைகளை உறுதி செய்வதற்கான, நிலையான –நிரந்தரமான அரசியல்தீர்வு இப்போது எங்கோ ஒரு தொலைவுக்குத் தள்ளிச் செல்லப்பட்டு விட்ட மாதிரியான உணர்வு தான் தோன்றுகிறது.

இலங்கைத் தீவில் சம உரிமைக்காகப் போராடப் புறப்பட்ட தமிழ் இனம், அது கிடையாத நிலையில், தனிநாட்டுக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், ஆயுதமேந்திய அந்தப் போராட்டம், முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின்னர், தமிழரின் போராட்ட வடிவம் மீண்டும் மாற்றம் காண நேரிட்டது.

அந்த மாற்றத்தினூடே, இந்த ஆறு ஆண்டுகளிலும், தமிழரின் அரசியல் போராட்டம் முன்நோக்கி நகர்ந்திருப்பதாக கருத முடியவில்லை.

மீண்டும் பழைய நிலைக்குள் தான் சுற்றிக் கொண்டிருப்பதாகவே உள்ளுணர்வு குறுகுறுக்கிறது.

இப்போது, முள்ளிவாய்க்கால் அநீதிகளுக்கு நீதி கோருவதும், அடிப்படைப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதும், தான் தமிழரின் போராட்டமாக மாறியிருக்கிறது.

இது இயல்பான மாற்றம் அல்ல- திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மாற்றமாகவே கருத வேண்டும்.

தமிழ் மக்கள் தமது நியாயமான அரசியல் உரிமைகளுக்காக போராட முடியாமல் திசைதிருப்பி விடப்பட்டுள்ளனர்.

தமது பிரதான கொள்கையில் இருந்து விலகி நிற்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தமிழரின் பிரதான அரசியல் உரிமைக் கோரிக்கை பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

நிலையான அமைதிக்கும், நிரந்தரமான அரசியல் தீர்வுக்கும் எந்த உத்தரவாதமோ, உறுதியான நம்பிக்கையோ இல்லாமல் நிரந்தரமாகவே காத்திருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு முறை வரும் போதும், அதனை நினைவு கூருவதற்காகவே போராட வேண்டிய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டு நிற்கிறது.

இப்படியொரு நிலையில், நிலையான அரசியல் தீர்வுக்காக இன்னும் எவ்வளவு போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் என்று ஊகிக்கவே முடியாதுள்ளது.

தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அனைத்துலக சமூகம், நீதியைப் பெற்றுக் கொடுப்பதாக கூறுகிறது.

அதுபோலவே, தமிழருக்கு அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுக்கும், அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்கும் கடப்பாடும் அவர்களுக்கு உள்ளது.

முள்ளிவாய்க்காலில், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப்பட்டதற்கு, அனைத்துலக சமூகத்தின் பொறுப்பின்மையும் ஒரு காரணம். இது அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது.

அதற்கான பரிகாரத்தை, அவர்கள் செய்தாக வேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய நேரம் இது.

இலங்கைத்தீவில் தமிழரின் ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளையும், உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளே இனித் தீவிரம் பெற வேண்டும்.

இல்லையேல், புதுப்புதுப் பிரச்சினைகளை முளைவிடச் செய்து, சிங்களதேசம், தமிழரின் உரிமைப் போராட்டத்தைத் திசை திருப்பி- நீர்த்துப் போகச் செய்து விடும் ஆபத்து உள்ளது.

இதையுணர்ந்து செயற்படும் காலம் வந்துள்ளது.

இந்தக் கட்டத்தில், புலம்பெயர் சமூகமும் தாயக தலைமைகளும் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தவிர்த்து, ஒன்றுபட்ட இலக்கு நோக்கி  பயணிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் காலத்தின் கட்டாயமாகின்றது.

எமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக இணைந்து தொடரக் கூடிய பயணமே, தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு விடிவைத் தேடித் தரும்.

முள்ளிவாய்க்கால் மண்ணுக்குள் புதையுண்ட உறவுகளுக்காய் இன்றைய நாளில் ஒளியேற்றும் தீபத்தின் சுடர் ஒளியில், தமிழரின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான பயணம் தொடரட்டும்.

– புதினப்பலகை குழுமத்தினர்

18-05-2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *