மேலும்

மகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது ஏன்?

mahinda-psdவழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில், கிகான் கமலேஸ் வீரசிங்க எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட, இராணுவத்தின் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஏப்ரல் 30ம் திகதி அமுலுக்கு வரும் விதமாக நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளது. நிர்வாக நோக்கம் கருதி இப்பிரிவு நிரந்தரமாக அகற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயந்த் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபரின் பாதுகாப்புச் பிரிவுத் தலைவரான கேணல் மகேந்திர பெர்னாண்டோ இராணுவ சிறப்புப் புலனாய்வுப் பிரிவினராலும் குற்றப் புலனாய்வுப் பிரிவாலும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.  அங்குனகொலபெலஸ்ஸவில் இராணுவக் கோப்ரல் ஒருவர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே கேணல் மகேந்திர பெர்னாண்டோ விசாரணை செய்யப்பட்டார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி சந்திப்பில் கலந்து கொண்ட போது அவருக்கு அருகில் துப்பாக்கியை ஏந்தியவாறு இராணுவக் கோப்ரல் ஒருவர் நெருங்கிய சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதிபர் பாதுகாப்பிற்கான இராணுவப் பிரிவானது சிறிலங்காவின் முன்னாள் அதிபர்கள் அனைவருக்கும் பாதுகாப்பை வழங்கவில்லை. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு அதிபர் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சிறப்புக் காவற்துறை அதிரடிப்படை ஆகியவற்றின் பெயரில் காவற்துறைப் பாதுகாப்பு மட்டும் வழங்கப்பட்டது.

அதிபர் சந்திரிகா குமாரதுங்க பதவிக்கு வந்த போது, அதிபர் பாதுகாப்புப் பிரிவிலிருந்த காவற்துறை சிறப்பு அதிரடிப் படையினரை அகற்றினார். இதற்குப் பதிலாக இராணுவ வீரர்கள் இணைக்கப்பட்டனர்.

முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் அவரது மகனான ரவி ஜெயவர்த்தனவின் ஆலோசனையின் பேரில், ஐக்கிய தேசியக் கட்சியின் துணை ஆயுதப்படையாக, சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டதன் காரணமாகவே சந்திரிகா தனது காலத்தில் சிறப்பு அதிரடிப் படையை அகற்றி அதற்குப் பதிலாக இராணுவ வீரர்களை நியமித்திருந்தார்.

சிறப்பாகப் பயிற்றுவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப் படையினர் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பாதுகாப்பிற்காக முதல் வரிசையில் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தொடர்ந்து அதிபர்களான பிறேமதாச மற்றும் டி.பி.விஜேயதுங்க ஆகியவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பாளர்களாகச் செயற்பட்டனர்.

அதிபர் சந்திரிகாவுக்கு சிறப்பு அதிரடிப் படையினரின் பாதுகாப்புத் தொடர்பில் திருப்தி ஏற்படவில்லை. இதனால் இவர் அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவை உருவாக்கினார்.

மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதிலிருந்தே தனக்கான பாதுகாப்பை வழங்கிய அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவின் மீது தான் அதிபராகப் பதவியேற்ற பின்னர் நம்பிக்கை கொண்டிருந்தார்.

மகிந்த அரசாங்கம் இப்பிரிவை தரமுயர்த்தியதுடன், இதற்குள் இராணுவப் பிரிவையும் இணைத்து அதிபர் செயலகப் பாதுகாப்புப் படை எனப் பெயர் மாற்றம் செய்தது.

mahinda-psd

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர்,  சிறப்பு அதிரடிப் படை மற்றும் அலரி மாளிகைளில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட இராணுவத்தை நம்பினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் முயற்சிகளிலிருந்து இராணுவத்தினர் தன்னைக் காப்பாற்றினர் என்பதால் தனது பாதுகாப்புப் பிரிவில் மைத்திரிபால சிறிசேன அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இறுதியாக, ஏப்ரல் 30ம் திகதி அமுலுக்கு வரும் விதமாக அதிபர் செயலகப் பாதுகாப்புப் படை அகற்றப்பட்டுள்ளது.

இராணுவத்தின் வரலாற்றில் இப்பிரிவானது மிகவும் குறுகிய காலம் வரை மட்டுமே செயலாற்றியுள்ளது. இப்பிரிவு கலைக்கப்பட்டதானது அதிபரின் பாதுகாப்பில் எவ்வித பாதிப்பையும் செலுத்தாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயந்த் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரிவு கலைக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்குப் பாதுகாப்பை வழங்குகின்ற இராணுவத்தினர் முன்னாள் அதிபருக்கான பாதுகாப்புப் பிரிவு என்ற புதிய பிரிவின் கீழ் மாற்றப்பட்டுள்ளனர். இப்புதிய பிரிவின் தலைவராக கேணல் மகேந்திரா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபருக்கான பாதுகாப்பானது முற்றிலும் மீள்வடிவமைக்கப்பட்டுள்ளமைக்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் மீதான சந்தேக நடவடிக்கையே காரணமாகும்.

குறித்த பாதுகாப்பு இராணுவ வீரர் துப்பாக்கியுடன் சிறிலங்காவின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனவை நெருங்கிய சம்பவமானது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. நாட்டின் முதலாவது குடிமகனின் பாதுகாப்பை மீறியமைக்காக அதிபர் செயலகப் பாதுகாப்புப் பிரிவு மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரமானது அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் தற்போது அதிகம் பேசப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் அம்பாந்தோட்டை மாவட்ட மாநாடு ஏப்ரல் 25 அன்று அங்குனகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற போதே அதிபரின் பாதுகாப்புப் பொறிமுறை மீறப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

தாடி வளர்த்திருந்த பாதுகாப்பு வீரர் ஒருவர் அதிபரை நோக்கி நெருங்கிய வேளையில் காவற்துறை வீரர் ஒருவருக்கு குறித்த வீரரின் நடவடிக்கை மீது சந்தேகம் ஏற்பட்டது. குறித்த சந்தேக வீரரின் இடுப்பில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று உள்ளதை காவற்துறை  வீரர் அவதானித்தார்.

இதன் பின்னர் சந்தேகத்திற்குரிய இராணுவக் கோப்ரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது. இவர் தன்னை நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட பாதுகாப்பு வீரர் என அறிமுகப்படுத்தினார். இவர் இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் எனவும் கூறினார்.

அம்பாந்தோட்டை கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரி குறித்த சந்தேக நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருந்ததாலேயே குறித்த வீரர் கைது செய்யப்பட்டு இவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியும் மீட்டெடுக்கப்பட்டது.

இவர் எவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதியின்றி உள்நுழைந்தார் என்பது விசாரணை செய்யப்பட்டது.

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்த அதிபர், சபாநாயகர்,  அமைச்சர்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக அறிந்திருக்கவில்லை.

இந்த நிகழ்வு முடிவடைந்த பின்னரே, சந்தேக நபரைக் கைது செய்த சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த வீரர், இது தொடர்பாக தனது மூத்த உதவிக் காவற்துறை மா அதிபரான றோய் சுமணவர்தனவிடம் இச்சம்பவத்தைத் தெரியப்படுத்தினார்.

கருத்தரங்கு இடம்பெற்ற அன்றைய தினம் அதிபர் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பாக இருந்த மூத்த காவற்துறை அத்தியட்சகரான எம்.டி.ஆர்.எஸ்.தமிந்தவிடம் உதவிக் காவற்துறை மா அதிபர் சுமணவர்த்தன கைதுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தார்.

அதுவரை இந்த விடயம் தொடர்பாக காவற்துறை அத்தியட்சகரான தமிந்தவுக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக அவரின் கீழ் பணிபுரிந்த அதிகாரிகள் தமிந்தவுக்கு கைதுச் சம்பவம் தொடர்பாக அறிவிக்கவில்லை.

கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களை சோதனை செய்யும் பொறுப்பு காவற்துறை உதவி அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலவிடம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இவருக்குக் கூட இந்த விடயம் தொடர்பாக எதுவும் தெரியாது.

கடமையில் ஈடுபட்டிருந்த எந்தவொரு காவற்துறை அதிகாரிகளும் இது தொடர்பாக இவருக்கு அறியப்படுத்தவில்லை. இறுதியாக, குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட காவற்துறை அதிகாரி அடையாளங் காணப்பட்டார்.

இவர் இது தொடர்பாக தனது மூத்த அதிகாரிகள் எவருக்கும் தெரியப்படுத்தவில்லை. சந்தேகிக்கப்பட்ட நபர் தான் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் எனத் தன்னை அடையாளங் காண்பித்ததால் அவர் அங்கிருந்து அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபர் கலந்து கொள்கின்ற நிகழ்விற்கு பிரதமர் கூடத் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை நிராயுதபாணியாகவே கூட்டிச் செல்ல முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் எனத் தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தனது கைத்துப்பாக்கியுடன் சிறிலங்கா அதிபர் கலந்து கொண்டிருந்த கருத்தரங்கில் உள்நுழைந்தமை தொடர்பாக காவற்துறை மா அதிபரின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தனிப்பட்ட 15 பேரிடம் விசாரணை மேற்கொண்ட போதிலும் நாமல் ராஜபக்சவிடம் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.

எனினும், துப்பாக்கி வைத்திருந்தவாறு அதிபரின் தலைமையில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட சந்தேக நபர் தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி அல்ல எனவும் ஆனால் இவர் தன்னுடன் வந்திருந்தார் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இவர் தண்ணீர்ப் போத்தல் ஒன்றை வைத்திருந்ததாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

எனினும், சந்தேக நபர் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்ததாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவராவார்.

வி.ஐ.பி நுழைவாயிலின் ஊடாக கருத்தரங்கு மண்டபத்திற்குள் உள்நுழையாத நாமல் ராஜபக்ச, பொது நுழைவாயிலின் ஊடாகவே உள்நுழைந்தார் என்றும் இவர் குறித்த சந்தேக நபரைத் தனது மெய்ப்பாதுகாவலர் எனவும் அறிமுகப்படுத்தியிருந்ததாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இதன் பின்னர், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் நாமல் ராஜபக்சவையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் எவ்வித சோதனைகளுக்கும் உட்படுத்தாது கருத்தரங்கு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்வதற்கு அனுமதித்திருந்தனர்.

பிரதமரின் மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட ஆயுதம் தரித்த எவரும் குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு அப்பால் உள்நுழைய முடியாது. அத்துடன் சிறிலங்கா அதிபரை நெருங்கவும் முடியாது.

வேறெந்தத் தனிப்பட்டவர்களும் இப்பாதுகாப்புப் பொறிமுறையுடன் சவால் விட முடியாது. அதிபரின் பாதுகாப்பு மீறப்பட்டதானது மிகவும் மோசமான தவறாகும்.

வழமையாக, புதிய அதிபர் ஒருவர் பொறுப்பேற்கும் போது முன்னாள் அதிபரின் மெய்ப்பாதுகாவலர்களுக்குப் பதிலாக தனக்கு விசுவாசமானவர்களை நியமிப்பது வழமையாகும். ஆனால் அதிபர் மைத்திரிபால சிறிசேன நடைமுறைக்கு எதிராகச் செயற்பட்டிருந்தார்.

அதாவது இவர் முன்னாள் அதிபரால் நியமிக்கப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களை அகற்றவுமில்லை. தனக்கான புதிய பாதுகாவலர்களை நியமிக்கவுமில்லை.

இந்த ஆபத்தான சம்பவமானது இவ்வாறான ஒரு தவறிலிருந்தே தோன்றியிருக்கலாம். இத்தவறானது அதிபருக்கான பாதுகாப்புப் பிரிவை அகற்ற வேண்டும் என்கின்ற தீர்மானத்தை எடுப்பதற்கு வழிவகுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *