மேலும்

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை

ruthra-speechஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்நாட்டு மக்களின் முனைப்பான பங்களிப்பு மிகவும் அவசியமானது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது இணையவழி உரையில் தெரிவித்திருந்தார்.

ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை மேற்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அல்லது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்குவதற்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றுக்கு ஒத்ததாக நம்பகமான அனைத்துலக நீதிசார் பொறிமுறையை உருவாக்குமாறு வி.உருத்திரகுமாரன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா மீதான ஐ.நா உள்ளக ஆய்வு அறிக்கை தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் குறிப்பிடும் போது, போரின் முதல் ஆறு மாதங்களில் 70,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

போரின் தந்திரோபாயமாக, பாலியல் வன்புணர்வுகள் பயன்படுத்தப்படும் பொஸ்னியா, பர்மா, கொங்கோ மற்றும் சூடான் போன்ற நாடுகளுடன் சிறிலங்காவும் தற்போது இணைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் குறிப்பிட்டிருந்ததாக வி.உருத்திரகுமாரன் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

எந்தவொரு அனைத்துலக நீதி நடவடிக்கையையும் பிரதியீடு செய்யும் நோக்குடன் சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தால் உருவாக்கப்படும் உள்நாட்டு அல்லது இரண்டும் இணைந்த பொறிமுறையானது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் அழைப்பைத் திசைதிருப்புவதற்கான அல்லது பொறுப்புக்கூறல் தொடர்பான எந்தவொரு காத்திரமான செயற்பாடுகளையும் தாமதப்படுத்துவதற்கான முயற்சியாகவே நோக்கப்பட முடியும் என வி.உருத்திரகுமாரன் மேலும் குறிப்பிட்டார்.

ruthra-speech

உள்நாட்டு உண்மை மற்றும் மீளிணக்கப்பாட்டிற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான முயற்சிகள் தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை அவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான பிறிதொரு திசை மாற்றும் தந்திரோபாயம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கையெழுத்துப் பரப்புரையை ஆரம்பிக்கும் நிகழ்வின் போது இணையவழி மூலமாக மேற்கொண்ட உரையில் குறிப்பிட்டார்.

‘சிறிலங்காவில் புதிய அதிபர் பதவிக்கு வந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியற் சூழல் மாற்றமுறவில்லை. இறுதிப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா உட்பட முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இராணுவ ஆட்சி தற்போதும் நடைமுறையிலுள்ளது. வடக்கு கிழக்கில் அதிகளவில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் மக்கள் மிகவும் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இதனால் தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கை மிகவும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

ஆகவே உள்நாட்டு அல்லது அனைத்துலக சமூகத்துடன் இணைந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் முன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியக்காரர்கள் சுதந்திரமாக தமது சாட்சியங்களை வழங்க முடியாது.

இதனாலேயே ஈழத் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது இன்றியமையாததாகும்’ என வி.உருத்திரகுமாரன் மேலும் சுட்டிக்காட்டினார்.

‘இவை தவிர, சிறிலங்காவின் தற்போதைய அதிபர் சிறிசேன போரின் இறுதிக்கட்டத்தில், பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். இப்போரின் அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிறிலங்காவானது  போர்க்குற்றங்களுக்கு எதிரான, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான மற்றும் இனப்படுகொலைகளுக்கு எதிரான தண்டனைகளை வழங்கக்கூடிய குற்றவியல் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை’ பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

‘ஒன்றுபட்ட சிறிலங்கா மற்றும் நீதிச் சேவை போன்றன இன ரீதியான நடுநிலையுடன் காணப்படவில்லை. பெரும்பாலான குற்றங்களில் அரச இயந்திரமே ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக மீறல்கள் இடம்பெறுகின்ற  போதெல்லாம் சிறிலங்காவின் நீதிச்சேவையானது எப்போதும் அரசியல் தலைமைக்குச் சார்பாகவே செயற்படுகிறது.

தமிழர் ஒருவர் பிரதம நீதிபதியாக இருந்தபோதிலும் கூட, 1983ல் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழ் மக்களுக்குச் சார்பாக நீதி வழங்கப்படவில்லை’ என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள கையெழுத்துப் பரப்புரையின் தொடக்க விழாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் சரஸ்வதி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் ரி.வேல்முருகன், திராவிடர் விடுதலை இயக்கத்தின் தலைவர் ‘கொளத்தூர்’ மணி மற்றும் தோழர் தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *