மேலும்

கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்

TNA-pressசிறிலங்காவின் தேர்தல் சட்டம் மற்றும் சிறிலங்கா மற்றும் கொமன்வெல்த் நாடாளுமன்ற விதி முறைகளுக்கு அமைய, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகரிடம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், கையெழுத்திட்டு, சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

“ 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், நாடாளுமன்றத்துக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருந்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தேசிய முன்னணி ஆகியனவே அந்தக் கட்சிகளாகும்.

அதன்படி, அதிக ஆசனங்களைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்க, அடுத்து அதிக ஆசனங்களைப் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கட்சியாக தெரிவானது.

இந்தநிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரதமர் நியமிக்கப்பட்டு ஐக்கிய தேசிய கட்சி அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் சிறிலங்கா அதிபர் திகழ்கின்றார்.

இந்த அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் 7 ஆசனங்களைக் கொண்ட ஜனநாயக தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினரும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

எனவே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அல்லது ஐக்கிய தேசிய கட்சி யில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவான எந்த உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவராக முடியாது.

இதுவே தெளிவான சட்ட நிலையாகும். எமது நாட்டிலும் கொமன்வெல்த் அமைப்பிலும் நாடாளுமன்ற மரபுகளின் படி இதுவே நிலையாகும்.

அதன் அடிப்படையில், தற்போது நாடாளுமன்றில் 14 ஆசனங்களைக் கொண்ட இலங்கை தமிழரசு கட்சியே எதிர்கட்சியாக இருக்க தகுதியுடையது.

எனவே இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்” என்று சபாநாயகர் சமல் ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *