மேலும்

கொழும்பில் இராணுவம் குவிக்கப்பட்டது உண்மையே – தேர்தல் ஆணையாளர்

Mahinda Deshapriyaகொழும்பில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு அருகில் சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது உண்மையே என்று சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தேர்தல் நாளன்று இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்க வைக்க முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்துக் கருத்து வெளியிட்ட அவர்,

“முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ச எனது செயலகத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. 2010ம் ஆண்டில் தான் அவர் இங்கு இறுதியாக வந்தார்.

சதி நடந்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்படும் வரை அது குறித்து எதுவும் கூற முடியாது.

தேர்தல் அதிகாரிகளின் தகவல்கள் தேர்தலுக்கு முன்னர் திரட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை நாம் மறுக்கவில்லை. ஆனால் நாம் தகவல்கள் வழங்கவில்லை. சில பகுதிகளில் அதிகாரிகளின் தகவல்களை பெற முயற்சி நடந்தது.

பொன்னறுவை, அநுராதபுரம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகங்களுக்கு இராணுவ பாதுகாப்பு தேவையா என வினவப்பட்டிருந்தது. ஆனால் கேந்திர நிலையங்களுக்கு அருகில் இராணுவம் நிறுத்தப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணப்பட்ட டி.எஸ். மற்றும் றோயல் கல்லூரிகள் இராணுவத்தினால் சுற்றி வளைக்கப்படவில்லை.

தேவை ஏற்பட்டால் சிறப்பு அதிரடிப்படையினரை நிறுத்துவதென முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் திணைக்களத்தின் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

டி. எஸ். மற்றும் ரோயல் கல்லூரிகளுக்கு இராணுவமோ வேறு படைப்பிரிவோ வருவதற்கு முனையவில்லை.

இவற்றுக்கு அருகிலுள்ள மைதானங்களில் இராணுவம் நிலைகொண்டிருந்தது. இதற்கு முன்னரும் இவ்வாறு நடந்ததாக அறிகிறோம்.

இராணுவத்தை கடமையில் ஈடுபடுத்தும் அதிகாரம் காவல்துறைமா அதிபருக்கே இருக்கிறது. ஏதும் கலவரம் நடந்தால் இராணுவத்தை தருவிக்க முன்பே திட்டமிடப்பட்டிருந்தது.

இராணுவம் நிறுத்தப்பட்டது குறித்து கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையாளரினதோ காவல்துறைமா அதிபரினதோ அனுமதி இன்றி இராணுவம் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என அவர் உறுதியளித்தார்.

எனக்கு எவராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. அவ்வாறு தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை கிடையாது.

மூன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் அடுத்த முடிவு அதிகாலை 4.11 மணிக்கே வெளியிடப்பட்டது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் 10 முடிவுகள் வெளியிடப்படவில்லை.

ஆனால் நான் இந்த முடிவுகளை அறிவிப்பதற்காக அதிகாலை 3.10 முதல் 3.50 வரை கையொப்பமிட்டிருக்கிறேன்.

இதன்போது என்னுடன் அரசியல்கட்சி பிரதிநிதிகள் பலரும் கூட இருந்தார்கள். ஊடகங்களின் மூலம் 10 முடிவுகள் அறிவிக்கப்படாத போதும், அவை குறித்த மாவட்டச் செயலகங்கள் ஊடாகவும் தகவல் திணைக்களத்தின் ஊடாகவும் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டன.

ஊர்காவற்றுறை தொகுதி முடிவுகள் அதிகாலை 3.10 மணிக்கும் வன்னி அஞ்சல் வாக்கு முடிவுகள் 3.13 மணிக்கும், யாழ்ப்பாண தொகுதி முடிவுகள் 3.15 மணிக்கும்,  வட்டுக்கோட்டை தொகுதி முடிவுகள் 3.17 மணிக்கும், காங்கேசன்துறை தொகுதி முடிவுகள் 3.19 மணிக்கும், பலப்பிட்டிய தொகுதி முடிவுகள் 3.22 மணிக்கும், கண்டி அஞ்சல் மூல முடிவுகள் 3.35 மணிக்கும், கண்டி தொகுதி முடிவுகள் 3.42 மணிக்கும் மொனராகல தொகுதி முடிவுகள் 3.45 மணிக்கும், முல்கிரிகல தொகுதி முடிவுகள் 3.50 மணிக்கும் வெளியிடுவதற்காக நான் கையொப்பமிட்டேன்.

ஆனால் ஊடக நிறுவனங்களின் கணினிகளில் உள்ள கோப்புகள் நிறைந்துள்ளதால் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவற்றிற்கு முடிவுகள் கிடைப்பது தாமதாகியிருக்கிறது.

இது தவிர எமக்கு எதுவித அழுத்தமும் மேற்கொள்ளப்பட வில்லை.

தேர்தல் நேரத்தில் தேர்தல் சட்டங்களை மதித்து நடக்கும் நிலை காணப்படவில்லை.

அரச ஊடகங்கள் மட்டுமன்றி தனியார் ஊடகங்களும் தேர்தல் சட்டங்களை மீறின” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *