மேலும்

கிழக்கு முதல்வர் பதவி குறித்து மைத்திரி, ரணிலுடன் கூட்டமைப்பு பேச்சு

TNA-pressகிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு சரியானதே என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபரை மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சந்திப்புகளின் போது, கிழக்கு மாகாணசபையில் இழுபறிக்குள்ளாகியிருக்கும் ஆட்சிமாற்றம், மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்புகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,

“சிறுபான்மையினரைப் பெரும்பான்மை இனமாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர்.

அதேவேளை, கிழக்கு மாகாணசபையில் தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியாகத் திகழ்கிறது.

எனவே, கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் நாம் தெளிவாக எடுத்துரைத்தோம்.

நாம் முன்வைத்த கருத்துகள் நியாயமானது என்று அவர்கள் எம்மிடம் கூறினர்.

எனவே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்மை ஆதரிக்க முன்வரவேண்டும்.

அவ்வாறு முன்வந்தால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அரவணைத்துக் கொண்டு கிழக்கு மாகாணசபையில் நாம் ஆட்சியமைப்போம்.

கடந்த காலத்தில் விட்ட தவறை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேலும் விடக்கூடாது.

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன், கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைமையிலான ஆட்சி அமைய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எண்ணிக்கை அடிப்படையில் மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே கூடுதலாக ஆசனங்கள் இருக்கும் நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவியைக் கோருவது தார்மீகமற்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடனான நேற்றைய சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *