மேலும்

மைத்திரி அரசின் மூன்று அதிரடி நடவடிக்கைகள்

Maithripala-Sirisenaவெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றும், வெளிவிவகாரச் சேவையைச் சாராத, அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சித்திராங்கனி வகீஸ்வரா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 57 தூதுவர்களுக்கு  இதற்கான உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இவர்களை பெப்ரவரி 28ம் நாளுக்குள் நாடு திரும்புமாறும் கோரப்பட்டுள்ளது.

54 நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களில், முன்னைய அரசாங்கத்தினால் பெரும்பாலும் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களே தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

தற்போதுள்ள தூதுவர்களில் 10 பேர் மட்டுமே வெளிவிவகாரச் சேவையில் தகைமை வாய்ந்த அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவுடன் குறைந்த எரிபொருட்களின் விலை

நேற்று நள்ளிரவில் இருந்து எரிபொருட்களின் விலைகள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் சக்தி, மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்ரேன் பெற்றோல் 117 ரூபாவாகவும், 95 ஒக்ரேன் பெற்றோல் 128 ரூபாவாகவும், டீசல் 95 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 110 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 65 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த எரிபொருள் விலைக்குறைப்புக்கு இன்றைய அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்படும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

51 ஆக உயர்ந்தது அமைச்சர்களின் எண்ணிக்கை

சிறிலங்கா அரசாங்கத்தில் நேற்று மேலும் ஆறு அமைச்சர்கள் பதவியேற்றுள்ளதையடுத்து, மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், நேற்று முஸ்லிம் விவகார அமைச்சராக அப்துல் ஹாலிம் முகமட் ஹாசிம் பொறுப்பேற்றார்.

அத்துடன் ஹசன் அலி சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

அதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க, வசந்த அலுவிகார, அமீர் அலி, மொகமட் தௌபிக் ஆகிய நால்வரும் நேற்று பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 29 ஆகவும், இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 10 ஆகவும், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 12 ஆகவும் அதிகரித்துள்ளது.

100 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்கப் போகும் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *