மேலும்

அலரி மாளிகையில் மொகான் பீரிசை கண்டதாக நினைவில்லையாம் – உதய கம்மன்பில கூறுகிறார்

udaya gammanpilaதேர்தல் நாளன்று இரவு அலரி மாளிகையில் பிரதம நீதியரசர் இருந்தாரா என்பது தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ள முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்வது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பின்னர், இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள மகிந்த ராஜபக்ச முயற்சித்த்தாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போது அலரி மாளிகையில் இருந்த உதய கம்மன்பிலவிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“அவசரகாலச்சட்டத்தைப் பிரகடனப்படுத்தும் முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல் வாதிகள் பலரின் பாதுகாப்புக் குறித்த கவலைகள் எழுந்திருந்தன.

வாக்கு எண்ணும் நிலையத்தில் ஐதேக ஆதரவாளர்கள் மாகாணசபை உறுப்பினர் சமன்மல்லி சகலசூரியவைத் தாக்க முயன்றிருந்தனர்.

கொழும்பில் பல இடங்களில் வன்முறைகளுக்கு வாய்ப்பிருந்ததுடன், ஆளும்கட்சியினர் தாக்கப்படும் கவலையும் இருந்தது.

அதுதவிர, புதிய அதிபர் பதவியேற்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குவது குறித்தே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவுகளை வழங்கினார்.

அவரது ஒரு கவலை தனது சகோதரர் கோத்தாபய ராஜபக்சவின் பாதுகாப்பு பற்றியதாகவே இருந்தது.

இப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் அதுபற்றிப் பேசினார். அது தான் தேர்தல் நாளன்று இரவு நடந்தது.” என்று குறிப்பிட்டார்.

அன்று அலரிமாளிகையில் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் அங்கு நின்றிருந்தாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அங்கு அன்றிரவு நிறையப் பேர் நின்றதாகவும், அவர்களில் பிரதம நீதியரசர் மொகான் பீரிசைக் கண்டதாக தனக்கு நினைவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *