மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிர்ப்பு

parliamentசிறிலங்காவில் கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, முதல்முறையாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது.

இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகராக  உள்ள, முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், இன்றைய கூட்டத்தில், சபாநாயகரை மாற்றுவதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, 100 நாள் செயற்திட்டத்தின் படி, சிறிலங்கா அதிபரின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும்- 17வது அரசியலமைப்புத் திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், இன்றைய கூட்டத்தில் 19வது திருத்தச்சட்ட யோசனைகள் சமர்ப்பிக்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்துக்கு ஏழு கட்சிகள் எதிர்ப்பு

எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால சில்வா நியமிக்கப்பட்டதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஏழு அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள, கட்சிகளின் தலைவர்களான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, ஏ.எல்.எம்.அதாவுல்லா, விமல் வீரவன்ச,  டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், சபாநாயகர் சமல் ராஜபக்சவை சந்தித்து இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் தம்மை கட்சித் தலைவர்களாக சிறப்பு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.

பிரதமரையும், எதிர்க்கட்சித் தலைவரையும், அதிபரே நியமிக்க முடியாது என்று வாச தேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய தினேஸ் குணவர்த்தன, எல்லா அரசாங்கங்களினாலும் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகவும், அது தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *