மேலும்

வடக்கு மாகாணசபைக்கு இடையூறாக இருந்த பிரதம செயலரும் மாற்றப்பட்டார்

northern-provincial-councilவடக்கு மாகாணசபையின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த வடக்கு மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகளுக்குத் தடைவிதிக்கும் வகையில் முன்னைய மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி செயற்பட்டு வந்தார்.

அவரது நேரடி வழிநடத்தலில், மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ் மாகாணசபையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தார்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமுறை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.

ஆளுனரையும், பிரதம செயலரையும் மாற்றும்படி வடக்கு மாகாணசபை தீர்மானங்களை நிறைவேற்றிய போதிலும், புதியவர்களை நியமிப்பதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச உறுதி மொழி அளித்த போதும், அதனைச் செய்யவில்லை.

இதனால், வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் இறுக்கமடைந்ததுடன், இரட்டை நிர்வாகப் போக்கும் இருந்து வந்தது.

இந்தநிலையில், வடக்கு மாகாண ஆளுனராக இருந்து மேஜர் ஜெனரல் சந்திரசிறி நீக்கப்பட்டு, பாலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, வடக்கு மாகாண பிரதம செயலராக இருந்த விஜயலட்சுமி ரமேசும் நேற்று இடம்மாற்றப்பட்டுள்ளார்.அவர் தற்போது பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாணசபையின் பிரதம செயலராக, முன்னாள் முல்லைத்தீவு அரச அதிபர் பத்திநாதர் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *