மேலும்

சுதந்திரக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தெரிவானார் மைத்திரி

maithriசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன, மற்றும் அமைச்சர் துமிந்த திசநாயக்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

எனினும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

ஆனால், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

முன்னாள் அதிபர்களான சந்திரிகா குமாரதுங்க மற்றும், மகிந்த ராஜபக்ச ஆகியோர் கட்சியின் காப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா

nimal siripala de silvaசிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே நிமால் சிறிபால  சில்வா புதிய எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன எதிர்க்கட்சி பிரதம கொரடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இரவு நடந்த சந்திப்பில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கவும், எதிர்க்கட்சி வரிசையில் சுதந்திரக் கட்சி அமர்வதற்கும் இணக்கம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *