மேலும்

சீனாவின் திட்டத்தினால் நாட்டின் இறைமை, பாதுகாப்புக்கு ஆபத்து – சிறிலங்கா அரசாங்கம்

kabir hashimசீனாவின் 1.3 பில்லியன் டொலர் உதவியுடன் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் இறைமை பற்றிய கவலைகளை  ஏற்படுத்தியுள்ளதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் இந்த திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

“துறைமுக நகரத் திட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.

இதனால் ஏற்படக் கூடிய பாதுகாப்புக் கவலைகள் குறித்தும் நாம் எப்போதும் பேசி வந்துள்ளோம்.

இன்னொரு நாட்டுக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில், அறுதி அடிப்படையில் நிலத்தை வழங்க முடியாது. இந்த விடயத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாதுள்ளது.

திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம், துறைமுக அதிகாரசபையிடம் உள்ளது. ஆனால், இதனைச் செய்வதற்கு துறைமுக அதிகாரசபைக்கு ஆணை கிடையாது.

இது நிதி அமைச்சு மூலமாக வந்திருக்க வேண்டும். சரியான நடைமுறைகளின் ஊடாகவே இது வரவேண்டும்.

துறைமுக அதிகாரசபை ஒரு அதிகாரசபை. அதற்கு பலநோக்குத் திட்டத்தை செயற்படுத்தும் அதிகாரம் இல்லை.

அதற்கு கப்பல் மற்றும் துறைமுகங்கள் விடயத்தில் தான் அதிகாரம் உள்ளது. ஆனால் இது துறைமுகங்கள், கப்பல்கள் சம்பந்தமான திட்டம் அல்ல.

இது வீடமைப்பு வளாகங்களை அபிவிருத்தி செய்யும் திட்டம். இந்த திட்டம் புதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

இது எமது நாட்டின் இறைமையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாம் மிகப்பெரிய கவலை கொள்கிறோம்.

எமது நாட்டின் கரையோரப் பகுதியில் மாற்றத்தை ஏற்படுத்துவதானால், அது சரியான முறையில், நாட்டிலுள்ள  எல்லோரினாலும் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க வகையிலும் விழிப்புணர்வுடனுமே மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *