மேலும்

அரசதரப்புடனான சந்திப்பில் கூட்டமைப்புக்கு சாதகமான சமிக்ஞைகள்

TNA-pressதமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை  நடத்தியுள்ளது.

நேற்று நண்பகல், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்

அரசாங்கத் தரப்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, அதிபர் தேர்தலின்போது வடக்கு, கிழக்கு மக்கள் தமக்கு வாக்களித்தமைக்காக முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக மைத்திரிபால சிறிசேன கூறினார்.

இதையடுத்து கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன், தமது பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்குகளை அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

“இதுவரை காலமும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். ஆயினும் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.

* இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியமர அனுமதிக்க வேண்டும்.

* நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவேண்டும்.

* காணாமற்போனவர்கள் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* வடக்கு, கிழக்கு ஆளுனர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் மாகாண அமைச்சின் செயலர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஒரு நல்லிணக்க சமிக்ஞையாக முதலில் வடக்குக்காவது தமிழ் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

* வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்களை மாற்ற வேண்டும்.

* சுன்னாகம் மின்சார சபையினால் ஏற்பட்டிருக்கும் கழிவுஎண்ணெய் கசிவானது பல கிராமங்களை பாதித்திருப்பதல்,  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வெளிநாட்டிலிருந்து வருவோர் வடக்கிற்குப் பயணம் செய்வதற்கு முன் அனுமதி பெறும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

* இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு விரைவாக முன்வைக்கப்பட வேண்டும்.”

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதற்கு அரச தரப்பில்,

* இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் குழுவொன்றை அமைத்து இடங்களை இனங்கண்டு அவர்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விவரங்கள் திரட்டப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆளுனர்களை மாற்றுவதைப் பொறுத்தவரையில், ஒன்பது மாகாண ஆளுனர்களையும் மாற்றுவதற்கு உத்தேசித்துள்ளோம். ஆளுனர்கள் மாற்றத்தின்போது இந்த விடயமும் கவனத்திற் கொள்ளப்படும்.

* அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் மாற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும்.

* வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கான அனுமதி நடைமுறையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் குழுவொன்றை நியமித்து அதனூடாக அவ்விடயம் முன்னெடுத்துச் செல்லப்படும்  என்று  பதிலளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு ஆக்கபூர்வமாகவும் திருப்தியாகவும் இருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமைச்சரவையில் பங்கேற்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகாரபூர்வமான எந்த அழைப்பும் கிடைக்கவில்லை என்றும் அதுபற்றி கூட்டமைப்பு ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக அமைச்சர் பொறுப்பை ஏற்கும் வாய்ப்புகள் ஏதும் கிடையாது என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *