மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது சீனாவின் நகர்வுகளுக்கு இடையூறா?

Chinese President Xi Jinping - Sri Lanka President  Mahindaஅதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பான சீன அதிபரின் நகர்வுகளுக்கு இடையூறாக உள்ளது.

இவ்வாறு Bloomberg என்னும் ஊடகத்தில்  Natalie Obiko Pearson எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

பத்தாண்டு காலமாக சிறிலங்காவை ஆட்சி செய்த போது சீனாவுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிய மகிந்த ராஜபக்ச தற்போது நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச சீனாவுடன் கொண்டிருந்த மிக நெருங்கிய உறவைப் பயன்படுத்தி தனது தேர்தல் பரப்புரையில் சிறிலங்காவின் பொருளாதாரமானது சீனாவில் அதிகம் தங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

“தற்போது சிறிலங்காவில் ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துடன் நல்லதொரு உறவைக் கட்டியெழுப்புவதில் சீனா விருப்பங்கொண்டுள்ளதாக சீன அரசாங்கம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட ரீதியாக சிறிலங்காவின் கொழும்பிலுள்ள சீன இராஜதந்திரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்” என சங்காயிலுள்ள பியூடன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலகக் கற்கைகளுக்கான நிறுவகத்தின் பேராசிரியரான சாங்க் குய்கொங் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றதானது இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்துவது தொடர்பான சீன அதிபரின் நகர்வுகளுக்கு இடையூறாக உள்ளது.

கடந்த பத்தாண்டாக சீனா, சிறிலங்காவில் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளதுடன் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மீது சுமத்தப்பட்ட போர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவின் தலைமையிலான விசாரணைகளை முகங்கொடுப்பதற்கு சீனா ஆதரவளித்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்க அமைச்சராகச் செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன நவம்பரில் அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியின் பொது அதிபர் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இவர் தனது பரப்புரையின் போது சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுடன் சமனான உறவுகளை மேம்படுத்துவேன் என வாக்குறுதியளித்திருந்தார்.

“ராஜபக்ச அரசாங்கத்திடமிருந்து சீனாவுக்குக் கிடைத்த ஆதரவைப் போலல்லாது, சிறிலங்காவின் தற்போதைய புதிய அரசாங்கத்திடமிருந்து சீனா விமர்சனமற்ற ஆதரவைப் பெறாது என்பது நிச்சயமாகும்” என இன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்தும் சிறிலங்காவின் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்று இயக்குனர் ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார்.

சீனாவின் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹொங்க் லீ தற்போது சிறிலங்காவில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான Xinhua செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து சீனா பணியாற்ற விரும்புவதாகவும் இரு நாட்டு உறவுநிலையையும் புதியதொரு உச்சத்திற்குக் கொண்டு செல்ல சீனா ஆர்வங்கொள்வதாகவும் இந்த ஊடகம் தெரிவித்துள்ளது. ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் சீனா மிகப் பெரிய முதலீட்டாளராகச் செயற்பட்டது. சீனா சிறிலங்கா அரசாங்கத்தின் மிகவும் முதன்மையான நிதி வழங்குனராகவும், இரண்டாவது வர்த்தகப் பங்காளியாகவும் செயற்பட்டது.

சீன அதிபர் கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட போது, 40 பில்லியன் டொலர்கள் செலவிலான கட்டுமான நிதித் திட்டம் மற்றும் சிறிலங்காவின் கரையோரத்தை உள்ளடக்கிய சீனாவின் திட்டம் போன்றவற்றுக்கு ஆதரவான புதிய பட்டுப் பாதைத் திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கான பேச்சுக்களை மேற்கொண்டிருந்தார்.
சிறிலங்காவுக்கு சீனாவால் வழங்கப்பட்ட கடன்தொகை கடந்த பத்தாண்டில் இரண்டு மடக்காக அதிகரித்துள்ளது. 2012ல் 490 மில்லியன் டொலர்கள் சீனாவால் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டது. இது அமெரிக்கா, கூட்டணி அரசாங்கங்கள் மற்றும் கடன்வழங்கும் அமைப்புக்களால் சிறிலங்காவுக்கு வழங்கப்படும் கடனின் இரண்டு மடங்காகும்.

சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் அதிகரித்து வரும் பொருளாதார உறவானது இரு நாடுகளினதும் இராணுவ உறவிலும் பலத்தைச் சேர்த்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டு தடவைகள் சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் தரித்து நிற்பதற்கு அனுப்பியிருந்தது. இதனை இந்தியா மிகப் பலமாக எதிர்த்திருந்தது.

சிறிலங்காவின் தற்போதைய புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் பரப்புரையின் போது, வெளிநாடுகளால் கடனாகப் பெறும் நிதியில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களைக் கண்டித்திருந்தார். இவ்வாறான திட்டங்கள் நாட்டை ‘கடன்பொறிக்குள்’ தள்ளிவிடுவதாகவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியிருந்தார்.

இற்றைவரை சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களில் மிகப் பெரிய திட்டமாக சீனாவால் கொழும்பில் 1.4 பில்லியன் டொலர் செலவில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகரத் திட்டம் காணப்படுவதாகவும், இது நாட்டை மேலும் கடன்சுமைக்குள் கொண்டுசெல்வதாகவும் சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சீனாவுக்கு எதிராக சிறிசேன எவ்வாறு உறுதியான நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளார் என்கின்ற கேள்வியை எழுப்புகிறது. “சிறிசேன தான் வெளிநாடுகளுடன் சமமான உறவைப் பேணவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் எவரும் உண்மையில் சீனா போன்ற நாடுகளை சிறிலங்காவிலிருந்து வெளியேற்ற மாட்டார்கள்” என கொழும்பிலுள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்று இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கடந்த மார்ச்சில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து சீனா, ரஸ்யா, வெனிசுலா மற்றும் ஒன்பது நாடுகள் வாக்களித்தன.

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தை ராஜபக்ச அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வந்தபோது 40,000 இற்கும் மேற்பட்ட பொது மக்களைப் படுகொலை செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதே.

சிறிலங்காவின் மிகப் பெரிய இனசமூகமான சிங்களவர்கள் அமெரிக்காவின் ஆதரவுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அனைத்துலக விசாரணையை எதிர்த்தனர். போரின் போது சிறுபான்மைத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்கிய இந்தியாவை எதிர்த்து சிறிலங்காவில் தனது இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பாக சீனா இதனைப் பயன்படுத்தியது.

தற்போது சிறிலங்காவில் நடந்து முடிந்த தேர்தல் பெறுபேறானது சிறிலங்காவுடனான சீனாவின் உறவில் பெரிதளவில் தாக்கத்தைச் செலுத்தாது என பீஜிங்கிலுள்ள றென்மின் பல்கலைக்கழகத்தின் அமெரிக்கக் கற்கைகளுக்கான மையத்தின் இயக்குனரும் சீன அரச பேரவையின் ஆலோசகருமான சீ ஜின்கொங் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சீனா சிறிலங்காவுடன் நல்லதொரு உறவைப் பேணிவருகிறது. இந்நிலையில் தனியொரு தேர்தற் பெறுபேறு சீனாவுடனான சிறிலங்காவின் உறவில் பாரியதொரு தாக்கத்தைச் செலுத்தும் என நான் கருதவில்லை” என சீ ஜின்கொங் சிங்கப்பூரில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *