மேலும்

அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே இன்னமும் இருக்கிறார் கோத்தா

gotaசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, செய்திகள் வெளியாகிய போதிலும், அவர் தொடர்ந்தும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததையடுத்து, கோத்தாபய ராஜபக்ச தனது மனைவியுடன் மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டதாக, கொழும்பு ரெலிகிராப் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், அவர், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும், இன்னமும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்திலேயே தங்கியுள்ளார் என்றும், தி ஐலன்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவதை உணர்ந்ததும், கடந்த வியாழக்கிழமை அதிகாலையிலேயே தனது அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகையில் இருந்து வெளியேறியிருந்தார்.

ஆனால், கோத்தாபய ராஜபக்ச இன்னமும், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இருந்து வெளியேறவில்லை.

கோத்தாபய ராஜபக்ச வகித்து வந்த பாதுகாப்புச் செயலர் பதவிக்கு நேற்று, பஸ்நாயக்க என்று மூத்த சிவில் சேவை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும், கோத்தாபய ராஜபக்ச தனது வதிவிடத்தை விட்டு வெளியேறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச தோல்வியுற்றபோது அதிகம் அதிர்ச்சியடைந்தவர் கோத்தாபய ராஜபக்சவே என்றும், அவரே இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று மகிந்தவுக்கு ஆலோசனை கூறியதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், சுமுகமாக அதிகாரத்தைக் கைமாற்ற இணக்கம் ஏற்பட்டதும், கோத்தாபய ராஜபக்ச யாருடனும், பேசவில்லை என்றும், அமைதியாகவும் அதிர்ச்சியோடும் காணப்பட்டதாகவும், கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *