உதவிப் பொருட்களுடன் வந்திறங்கியது ரஷ்ய விமானம்
டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, 35 மெட்ரிக் தொன் எடையுள்ள மனிதாபிமான உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் ஒன்று சிறிலங்கா வந்துள்ளது.
உதவிப் பொருட்களை ஏற்றிய ரஷ்யாவின் IL-76 சரக்கு விமானம் இன்று மதியம் 1.10 மணியளவில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இந்த விமானத்தில், நடமாடும் மின் நிலையம், கூடாரங்கள் மற்றும் அரிசி, சீனி மற்றும் தாவர எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் லெவன் ஜாகார்யன், இந்த உதவிப் பொருட்களை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார்.

