காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு, கிழக்கில் போராட்டம்
அனைத்துலக மனித உரிமைகள் நாளான இன்று, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இன்று காலை, வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு, நீதி கோரும் பதாதைகளுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல் கொடுத்த, அவர்கள் அனைத்துலக நாடுகள் மனித உரிமை நாளிலாவது தங்களுடைய துன்பங்களை புரிந்து கொண்டு தமக்கான தீர்வினை பெற்றுத் தருவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை, அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் உப-தலைவி கலைவாணி, செயலாளர் ரஞ்சனா தேவி, பொருளாளர் சுனித்திரா தேவி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளரும், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன் உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.





