உதவிப் பணிக்கு மற்றொரு எம்ஐ-17 உலங்குவானூர்தியை அனுப்பியது இந்தியா
பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்காக, இந்திய விமானப்படையின் எம்ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று, இன்று காலை 11.50 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்துள்ளது.
சாகர் பந்து நடவடிக்கைக்காக முன்னர் பயன்படுத்தப்பட்ட இரண்டு எம்ஐ-17 உலங்குவானூர்திகள் அத்தியாவசிய பராமரிப்புக்காக இந்தியாவுக்குத் திரும்பிய நிலையில், இந்த உலங்குவானூர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு உலங்குவானூர்திகளும் கூட்டாக டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 270 இலங்கையர்களை மீட்டன.
இரண்டு உலங்குவானூர்திகளும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விநியோக மையங்களுக்கு சுமார் 50 மெட்ரிக் தொன் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்றன.
இன்று வந்த உலங்குவானுர்தியில் 14 பேர் கொண்ட இந்திய விமானப்படை குழு வந்துள்ளது.
இது சிறிலங்கா விமானப்படையினருடன் இணைந்து தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும்.
நாட்டின் ஒட்டுமொத்த நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதால், தொடர்ச்சியான பேரிடர் நிவாரண முயற்சிகளுக்கு ஒரு உலங்குவானூர்தி போதுமானது என்று, இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தியாவிலிருந்து பேரிடர் நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு, மற்றொரு விமானம் இன்று கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சரக்கு விமானமான C-17 விமானம், இன்று பிற்பகல் 1:55 மணியளவில், இந்தியாவின் படாநகரில் இருந்து கட்டுநாயக்கவுக்கு வந்துள்ளது.
இந்த விமானத்தில் 110 அடி நீளம் கொண்ட 61 மெட்ரிக் தொன் பெய்லி பாலம், 600 கிலோ எடையுள்ள மருந்துகள் ஆகியன கொண்டு வரப்பட்டுள்ளன.
