மேலும்

தப்பியோடிய சிறிலங்கா இராணுவத்தின் முத்த அதிகாரிகள் கொழும்பு திரும்புகின்றனர்

சிறிலங்காவை விட்டுத் தப்பிச் சென்று வெளிநாடுகளில் வசித்து வந்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான – இரண்டு மூத்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.

மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும், பிரிகேடியர் துமிந்த கெப்பிட்டிவலன ஆகியோரே நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

2010ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், சரத் பொன்சேகா தோல்வியடைந்ததையடுத்து, சிறிலங்கா அரசாங்கத்தினால், கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

தற்போது மைத்திரிபால சிறிசேன புதிய அதிபராகத் தெரிவாகியுள்ளதையடுத்து, இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களை சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.

இதற்கிடையே, புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில், முப்படைகளின் தலைமைக் கட்டமைப்புகளிலும் மாற்றங்கள் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முப்படைகளின் தளபதிகள், கூட்டுப்படைகளின் தளபதி ஆகியோர்  நீக்கப்பட்டு, புதிய அரசின் நம்பிக்கைக்குரியவர்கள் நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், நாடு திரும்பியுள்ள மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, மற்றும் பிரிகேடியர் கெப்பிட்டிவலன ஆகியோருக்கு மீண்டும் இராணுவ சேவையில் இடமளிக்கப்படலாம் என்றும், முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *