மேலும்

மைத்திரியின் பரப்புரை மேடை மீது துப்பாக்கிச் சூடு – 3 பேர் காயம்

maithriஇரத்தினபுரியில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை பரப்புரை மேற்கொள்ளவிருந்து மேடை மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மேடை அலங்காரப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நிவித்திகலவில் இன்று காலை 11 மணியளவில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இடம்பெறவிருந்தது.

இதற்காக மேடை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இன்று அதிகாலை 5 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமுற்ற 3 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன பங்கேற்கும் பரப்புரை மேடைகளை குறி வைத்து தொடர்ச்சியாக துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில், அவரது பாதுகாப்புக் கருதி, பல இடங்களில், அவர் நேற்று நேரடிப் பரப்புரைகளை தவிர்த்துள்ளார்.

கண்டியில் நடந்த பல பரப்புரைக் கூட்டங்களில் மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவில்லை என்றும், தொலைபேசி மூலம் அவரது உரை ஒலிபரப்புச் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கப்படலாம் என்றும், அவ்வாறான நிலை ஏற்பட்டால், அது மகிந்த ராஜபக்சவுக்கு மாறாத களங்கத்துடனேயே ஆட்சி செய்ய நேரிடும் என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *